உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..

பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம்.

“சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும்

இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர்.

இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (26: 88,89)

“மரணித்த உள்ளமானது” சீரான உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும்.

இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை நினைப்பவனுக்கும் நினைக்காதவனுக்கும் உதாரணம்:- உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்கள்.”என்றனர். (புகாரி, முஸ்லிம்)

“நோய்வாய்ப்பட்ட உள்ளமானது” இவ்வுள்ளம் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும்.

எனினும் தவறான விடயங்களின் விசயத்தில் ஆர்வம் கொண்டதாகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை அல்லாஹ்வின் நினைவை விட்டும் விலக்கி அவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.(நவூதுபில்லாஹ்)

இருவகையான நோய் கொண்ட உள்ளங்கள்: முதலாவது சந்தேக நோயுடன் தொடர்புடையது, இது அல்லாஹ்வின் மீதும் அவனது ஆளுமை மீதும், அல்லாஹ்வின் இறைத்தூதர் மீதும் அவர்களின் ஹதீஸ்களின் மீதும் ஆராய்ச்சி என்னும் தர்க்கம் மூலம் இறைமறுப்பு நிலைக்கு கூட ஒருவனை கொண்டு போய்விடும்.

இத்தகைய உள்ளம் கொண்ட மனிதரைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:- “அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. ஆகவே, அந்நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்தி விட்டான். மேலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததின் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு”.(அல்குர் ஆன் – 2:10)

இந்நோயில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், அல்லாஹ்வையும் அவனது ரசூலையும், வேதத்தையும், நபிகளாரின் ஹதீஸ்களையும், நபித்தோழர்களையும் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டு நெறிமுறைகளையும் சந்தேகமின்றி ஏற்று வாழ முன்வருவது தான்.

இரண்டாவது இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்:- இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

இத்தகைய மனநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (33:32)

எந்த நேரமும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கின்றான் என்ற இறையச்ச உணர்வு மட்டுமே இத்தகைய நோய்களில் இருந்து நமது உள்ளத்தை சீர்படுத்தும்.

உள்ளம் பிரகாசமாய் நோயின்றி வாழ்வதற்கு அல்லாஹ்வை வணங்குதல், அவனை திக்ருகள் செய்தல், இம்மை மறுமை சிந்தனையை உள்வாங்குதல், மரண சிந்தனையோடு இருத்தல், அதிகமாக (தவ்பா) பாவமன்னிப்பு கோருதல், நல்லோர்களுடன் நட்பு கொள்ளுதல் போன்ற அழகிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்வோமேயானால்…தூய்மையான உள்ளத்துடன் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்களாவோம்.

சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! குறித்து

இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 29ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image