இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் : கடத்தல் கும்பல் 9 பேர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடல் வழியாக போதை பொருட்கள், மருந்து, மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யே அலைபேசி எண் 94899 19722க்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. எஸ்.பி., வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன் படி பதுக்கி வைத்திருந்த போதை மருந்து, மாத்திரைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பலை,  எஸ்.பி., வருண்குமார் தலைமையில் திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், திபாகர்,  சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி இன்று (21/05/2020) மதியம் சுற்றி வளைத்தனர். விசாரணையில் திருவாடானை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  அப்துல் ரஹீம் 49, அபுல் கலாம் ஆசாத் 23, அஜ்மல் கான் 48, முத்து ராஜா 38, அருள் தாஸ் 43, கேசவன் 42, அஜ்மீர் கான் 42, அப்துல் வஹாப் 36, சுரேஷ் குமார் 44 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 கிலோ 800 கிராம் போதை மருந்து, 3 மாத்திரைகள், 556 கிராம் ஹெராயின், வலி நிவாரணி பேஸ்ட், உள்ளிட்ட போதை வஸ்துகள் மற்றும் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஆட்டோ, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், போதை லஹிரி வஸ்துகள் விற்கும் வட மாநில கும்பலிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி சேகரித்த போதை மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணி பேஸ்ட்களை பதுக்கி வைத்திருந்து தொண்டி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. பறிமுதல் செய்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என போலீசார் தெரிவித்தனர். கடந்த 6 வாரங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தல்கும்பலை சுற்றி வளைத்த தனிப்பிரிவு மற்றும் சிறப்பு போலீசாரை பாராட்டிய எஸ்.பி., வருண்குமார், சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாக கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..