இறையச்சமில்லாத மனிதன் வேடதாரி என்பதற்கு பெருமானாரின் விளக்கம்!..ரமலான் சிந்தனை -23..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம்.

ஒருமுறை ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களை சந்தித்தபோது என்ன ஹன்ளலா எப்படி இருக்கீங்கனு? நலம் விசாரித்தார்கள். அதற்கு தாம் வேடதாரியாக இருப்பதாக பதில் கூறினார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள். இதை சற்றும் எதிர்பாராத அபுபக்கர்(ரலி) அவர்கள் சுபுஹானல்லாஹ், ஏன் இப்படி சொல்றீங்கனு கேட்டார்கள்?

ஆமாம், இறைத்தூதரின் அவையில் இருக்கும் போது அவர்களின் இம்மை, மறுமை போன்ற அழகிய உபதேசங்களை கேட்கும் போது சொர்க்கம், நரகம் இவைகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் ஒன்றிணைந்து விடுகிறோம்.

வெளியே வந்ததும் மனைவி, மக்கள், வியாபாரம், சொத்து, சுகம், நிலபுலன்கள் என இவற்றுடன் கலந்து விடுகிறோம். அண்ணலாரிடம் இருந்த போது உள்ள உணர்வுகளை இழந்து விடுகிறோமே இது வேடதாரி இல்லையா? எனக்கேட்டார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள்.

இஸ்லாத்தின் ஆரம்பகால கட்டத்தில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கும் போது அதனை பதிவு செய்பவர்களில் ஒருவராக இருந்தவர்கள் ஹன்ளலா(ரலி) அவர்களாகும்.

இப்படியொரு சிறப்புமிக்க நபித்தோழர் ஏன் இப்படி கூற வேண்டும்? என்ற யோசனையோடு அண்ணலாரிடம் வந்து நடந்த விபரத்தை கூறினார்கள் அபுபக்கர்(ரலி) அவர்கள்.

“எனது உயிர் தன் வசம் வைத்திருக்கும் அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அவையில் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இருந்த மனோ நிலையில் மாறாது எப்போதும் இருப்பீர்களேயானால் உங்கள் படுக்கையறையிலும், வீதிகளிலும் மலக்குகள் சந்தித்து கை குலுக்குவார்கள்” என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எந்த அவையில் நமக்கு அழகிய போதனைகள் வழங்கப்படுகிறதோ? அந்த போதனைகளை கேட்கும் ஆர்வத்தை விட அதனை நமது வாழ்வியல் நடைமுறையாக்கிட வேண்டுமென்னும் ஆர்வத்தினை அதிகப்படுத்திடல் அவசியம் என்பதைத்தான் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களைப்போன்ற நபித்தோழர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

ரமலான் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் கடந்த கால வாழ்க்கை நடைமுறையை சீர்படுத்தி வைக்கும் ஓர் அற்புத மாதமாகும். இம்மாதத்தில் நாம் எந்த மாதிரியான ஆன்மீக சிந்தனைகளை உள்வாங்கினோமோ அதே போன்று வாழவும் முயற்சிக்க வேண்டும்.

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்கள் கூறியதைப் போன்று “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம்.

வேடதாரிகள் என்னும் பழிச்சொல்லில் இருந்து நம்மை பாதுகாத்து வாழ இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக ஆமீன்.

தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!

இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 24ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..