தனது தவறை உணர்வதும், அதை திரும்ப செய்யாமல் இருப்பதுமே தவ்பாவின் சித்தாந்தமாகும்! ..ரமலான் சிந்தனை -19..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

எவர் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து அல்லாஹ்வை விசுவாசமும் கொண்டு நல்ல அமல்களை செய்தார்களோ; அவர்கள் சுவனம் செல்வார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 19:60)

எவர்கள் மறைவிலும் அர்ரஹ்மானுக்கு பயந்து வாழ்ந்து அவன்பால் மீளக்கூடிய பரிசுத்த உள்ளத்துடன் வருகிறார்களோ; அவர்களுக்கு சுவனம் நெருக்கமாக்கப்படும்”(அல்குர்ஆன் – 50:33)

மேலே நாம் பார்த்துள்ள இரண்டு வசனங்கள் மட்டுமல்ல, ஏராளமான வசனங்கள் மனிதன் தனது தவறை உணர்ந்து அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பு கோருதல் பற்றியும் அவ்வாறு மன்னிப்பு கோருவதின் மூலம் அவன் இவ்வுலகில் பரிசுத்தமாவதுடன் மறுமையில் சுவனவாசியாகவும் தகுதி உண்டு என்றே வலியுறுத்துகின்றன.

ரமலானில் மட்டும் தான் தவ்பா செய்யவேண்டும் என்பதல்ல, எப்போது ஒருவர் அல்லாஹ்வுக்கோ அல்லது அவனது அடியாரான சக மனிதருக்கோ தவறு செய்ததாக உணர்கிறாரோ, அப்போதே அந்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருதலே தவ்பாவின் சிறப்பாகும்.

அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரும் மனிதன், தனது தவறை அல்லாஹ்வுக்காக விடுவதும், செய்த தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருவதும், இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பதும், மரண தருவாய் வரை காத்திருக்காமல் உடனடியாக மன்னிப்பு கோருவதும் தான் தவ்பாவின் சித்தாந்தமாகும்.

தொண்டை குழியில் உயிர் ஊசலாடாதவரை அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.(திர்மிதி)

தவ்பா என்பது, தான் செய்த தவறு குறித்து கவலை கொள்வதே என நபிகள்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.(இப்னுமாஜா)

அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய இபாதத்துகள், கடமைகளில் ஒருவன் தவறு செய்தால், அதற்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு விடுவான்.

ஆனால் சக மனிதனுக்கு ஒரு தவறையோ அல்லது அடுத்தவரின் பொருளை அபகரித்தோ, அடுத்தவரின் நிலத்தில் சில அடியை ஆக்கிரமித்தோ, அல்லது அடுத்தவரின் உரிமையை பறித்தோ வாழும் மனிதன் தவ்பா செய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மனிதரிடம் சென்று மன்னிப்புக் கோருதல் அவசியமாகும்.

அடுத்தவரின் பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு அவருக்கு நாம் செய்த அநியாயங்கள் குறித்து அவரிடம் எடுத்து சொல்லி என்னை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுங்கள் எனக்கூறி அவர் மன்னித்தால் மட்டுமே அல்லாஹ்வும் நமது பாவத்தை மன்னிப்பான்.

ஒரு மனிதன் தனது குற்ற உணர்வுகளில் இருந்து மீள்வது அல்லாஹ்வின் நேசத்திற்குரியதாகும் என்பதை அருள்மறை குர்ஆன் மூலம் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:- “பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் – 2:222)

எந்த மனிதன் தனது பாவங்களை நினைத்து கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்பு கோருகிறானோ? அத்தகைய மனிதனை மறுமையில் அல்லாஹ் நேசம் கொள்வதோடு தனது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து ஜிப்ரீலே நான் நேசித்த இந்த மனிதனை நீங்களும் நேசியுங்கள் என்பான்.

பின்னர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சக வானவர்களை அழைத்து, வானவர்களே…அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்ட இந்த மனிதனை நானும் நேசித்துள்ளேன். நீங்களும் நேசியுங்கள் என்றதும் அனைத்து வானவர்களும் அல்லாஹ்விடம் தவ்பா செய்த மனிதனை நேசம் கொள்வார்கள்.

அல்லாஹ்வின் மிகச்சிறந்த அருட்கொடைகளில் சுவனமே மிகவும் உயர்ந்தது. இத்தகைய சுவனம் தனது தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்யும் மனிதருக்கு எளிதாக கிடைக்கும் என்று அண்ணலார் நவின்றுள்ளார்கள்.

நாம் அனைவரும் அதிகமதிகம் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி நமது இதயங்களை சுத்தம் செய்வோம், நாளை மறுமையில் சுவனத்தை பரிசாக பெறுவோம்.

மனிதரிடம் மன்னிப்பு கோருவதின் அம்சங்கள் என்னவென்பதை இன்ஷா அல்லாஹ்..

ரமலான் சிந்தனை 20ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..