விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம்:- முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம்:- முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த ரசாயன வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.

ரசாயன வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

வாயு கசிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் மக்கள் ஈரத்துணியால் முகத்தை மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும், நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும், கண் எரிச்சல் ஏற்பட்டால் கண்களை நன்றாக தண்ணீரால் கழுவ வேண்டும், தோலில் அரிப்பு ஏற்பட்டால் சோப்பு போட்டு கழுவ வேண்டும், உடல்நிலையில் வேறு மாற்றம் ஏற்பட்டு அசவுகரியமாக உணர்ந்தால் உடனடியாக 108-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..