Home செய்திகள் போராளிகளுக்கு ’போர்’ என்பது வாழ்வா, சாவா எனும் போராட்டம். சுயமரியாதையோடு வாழக்கிடைக்கும் இறுதி வாய்ப்பு:-திருமுருகன் காந்தி..

போராளிகளுக்கு ’போர்’ என்பது வாழ்வா, சாவா எனும் போராட்டம். சுயமரியாதையோடு வாழக்கிடைக்கும் இறுதி வாய்ப்பு:-திருமுருகன் காந்தி..

by Askar

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது அதீத அரசு ஒடுக்குமுறைக்கும், அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக எழுவது.

பாட்டாளிகள், பெண்கள், குழந்தைகள் என பலரும் நசுக்கப்படும் பொழுது, அவர்களிடமிருந்து எழும் எதிர்ப்பே போராளிகளை உருவாக்குகிறது.

அரசு இயந்திரமும், போராளிகளின் இயக்க கட்டமைப்பும் ஒன்றானதல்ல. அரசின் வசதிகளும், வாய்ப்புகளும், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வாய்ப்பதில்லை. அவ்வளவு ஏன், ஒரு அரசியல்கட்சி கவுன்சிலருக்குக் கிடைக்கும் வசதிகள் கூட, ‘தங்களைப் பாதுகாத்துக்கொள்ள’ அவர்களுக்கு கிடைக்காது.

ஆயுத பலமும், பயிற்சியும், மாதாந்திர சம்பளமும் வாங்கும் இராணுவத்தைக் கொண்டு இனவாத அரசு மக்களை கொலை செய்யும். இந்தக் கொலையை நியாயப்படுத்த ஊடகங்களை இறக்கும். அவதூறுகளை பரப்ப கூலி எழுத்தாளர்களை உருவாக்கும். போராடுகின்ற மக்களில் ஒரு பிரிவினரை பிரித்து அவர்களுக்கு எதிராக போராட ‘போலி போராளி’ குழுவை உருவாக்கும். ’பயங்கரவாதி’ என பாராளுமன்றத்தில் கூப்பாடு போடும். கொலை செய்யப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்தும். பொய் வழக்கு தொடுக்கும். நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தரும். இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு பதவி சுகம் கொடுக்கும். ஊழலை அனுமதிக்கும். சர்வதேச அளவில் தனது வணிக பலத்தை பயன்படுத்தி ஆதரவு திரட்டும்.மக்கள் சார்பு மனித உரிமை அமைப்புகளை முடக்கும், வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கும். மக்களுக்காக பேசும் புத்தகங்களை முடக்கும், அச்சகங்களை மூடும்.

ஒடுக்கப்படுகிற மக்களை இப்படியாக தனிமைப்படுத்தியே தனது இனப்படுகொலையை கட்டவிழ்க்கும். பெண்கள் சீரழிக்கப்படுவார்கள். குழந்தைகள் சீரழிப்படுவார்கள். பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தைகள் கொல்லப்படும். குழந்தைகள் முன்னிலையில் தாய் சீரழிக்கப்படுவாள், தந்தை சித்திரவதை செய்யப்படுவான். நிலம் அழியும், கல்வி அழியும், தொழில் அழியும், வழிபடும் தளங்கள் அழியும், பள்ளிகூடங்கள் அழியும், மருத்துவமனைகள் தகர்க்கப்படும்.

இத்தனை ஓநாய்களுக்கு மத்தியில் கொலைசெய்யப்படப் போகும் குடியானவன் தன் குடும்பத்தினரை பாதுகாக்க எதையும் செய்ய அணியமாவான். சாவும், சித்திரவதையும், அவமானமும் அவனை போராட தூண்டும். அடக்குமுறையை எதிர்க்க ஏழை குடியானவன் தனக்கு கிடைத்த கருவியைக் கொண்டு எதிர்த்து நிற்பான். இயக்கமாவான். தம் மானம் காக்க பெண்கள் கருவி ஏந்துவார்கள். அனாதைகளான குழந்தைகள் ஆதரவின்றி, உணவின்றி, வீடின்றி, உறவின்றி அலைந்து திரிவார்கள். அவர்களுக்கான அடைக்கலத்தையும் இயக்கமே கொடுக்கும். போராளி படையை உருவாக்க, இராணுவத்தினைப் போல தேர்வும், தேர்ச்சி முறைகளும் வைக்க போராளிகளுக்கு வசதி இருக்காது. கொலை செய்யப்படுவது ஆண், பெண், குழந்தை, முதியவர் என அனைவருமெனில், அனைவரும் தம்மைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தும் வாய்ப்பிருக்குமெனில் அதை உயர்த்துவார்கள். ஏனெனில் போராடுவதென்பது தொழில் அல்ல. சம்பளப்பணியும் அல்ல. பாராளுமன்ற பதவி பெரும் வழியுமல்ல.

இராணுவத்திற்கு ’போர்’ என்பது தொழில். மாதாந்திர சம்பளத்திற்கு பணி செய்யும் வேலைக்கூடம். அவர்கள் அங்கே தொழிலாளர்கள், பணியாளர்கள். வெற்றியெனில் பதக்கமும், பதவி உயர்வும், சம்பள மிகுதியும் கிடைக்கும். மரணமெனில் குடும்பத்தினருக்கு வசதியும், அவர் குழந்தைகளுக்கு உயர் படிப்பும், வேலையும் சாத்தியமாகும்.

போராளிகளுக்கு ’போர்’ என்பது வாழ்வா, சாவா எனும் போராட்டம். சுயமரியாதையோடு வாழக்கிடைக்கும் இறுதி வாய்ப்பு. தம் குழந்தைகளாவது எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வார்கள் எனும் நம்பிக்கை.

இராணுவத்தில் ஆட்சேர்ப்பு என்பது ஒரு வேலைவாய்ப்பு. அதில் குழந்தைத் தொழிலாளர்களை சேர்க்க இயலாது.

போராளியில் ஆட்சேர்ப்பு என்பது வேலைவாய்ப்பிற்கானது அல்ல. தம் மானம் காக்க யாராயினும் ஒன்றிணைந்து நிற்கவேண்டுமென்கிற நிர்பந்தம். தாய் தந்தையரை இழந்தவனுக்கு எதிர்த்து நிற்கவேண்டுமெனும் ஓர்மம். இழந்த நிலத்தை வெல்லவேண்டுமெனும் உறுதி.

குழந்தைகளை ’கொலை செய்யும்’ ராணுவத்தினை வளர்த்தெடுத்து, குழந்தைகள் தலையில் குண்டு போட ஆயுதம் கொடுத்து, நிதி உதவி கொடுத்து, புதிய போர்த்தந்திரங்களை கற்றுக்கொடுத்து, சட்டப்பாதுகாப்பு கொடுத்து, ஊடகத்தில் பாராட்டு பத்திரம் கொடுத்து கொண்டாடும் பாசிஸ்டுகள், போராளிகளிடத்தில் கேட்பார்கள், ” ஏன் நீங்கள் குழந்தைகளை உங்கள் இயக்கத்தில் வைத்திருக்கிறீர்கள்” என்று.

2009இல் 30,000 ஈழத்தமிழ் குழந்தைகளைக் கொலை செய்த இராணுவத்தை கேள்வி கேட்காதவர்கள், அக்குழந்தைகளை பாதுகாக்க போராடிய இயக்கங்கள் மீது அவதூறு வீசுவார்கள் என்றால் அவர்களை ‘பாசிஸ்டுகள்’ என்றோ, ‘நவபார்ப்பனர்கள்’ என்றோ அடையாளம் காணுங்கள்.

பாசிஸ்டுகள் இனவெறி அரசின் குரலை ஒலிப்பார்கள். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் எழுவோம்.

பாசிஸ்டுகளை சமரசமின்றி எதிர்கொள்வோம். நமக்கு இழக்க இனியும் எதுவுமில்லை. வரலாறு நம் பக்கம் இருக்கிறது.

நம் குழந்தைகளுக்கு போராளிகளை அடையாளம் காட்டுங்கள். புதிய உலகத்தை அவர்கள் படைப்பார்கள்.

தோழர் திருமுருகன் காந்தி மே17 இயக்கம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!