ரிப்பன் வெட்டிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-நீடிக்கும் மர்மம்!!!

ரிப்பன் வெட்டிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-நீடிக்கும் மர்மம்!!!

கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் மே.1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிம் ஜாங் உன் பொது மக்களிடையே தோன்றி ஒரு உரத் தொழிற்சாலையைத் திறந்து வைத்ததாக தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

அவரைக் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ததாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து உற்பத்தி குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதிபர் கிம் உடல்நிலை குறித்த எந்த தகவலும் வெளிஉலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டதால் அவர் உயிருடன் தான் உள்ளாரா? என்ற சந்தேகம் வலுத்து வந்தது. ஏனென்றால் கிம் தாத்தா முதலாம் கிம் இறந்தபோது 2 நாட்களுக்குப் பின்புதான் வெளிஉலகிற்கே தெரியவந்தது. இது குறித்து தென் கொரியா அரசிடம் ஊடகங்கள் சார்பில் கேட்டபோது வடகொரிய அதிபர் கிம்முக்கு உடல்நிலையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வழக்கமான பணிகளைச் செய்து வருகிறார் எனத் தெரிவித்தது.

மேலும், அதிபர் கிம் கவலைக்கிடமாக இருக்கிறார் எனும் செய்தியை மறுத்தது
இந்த சூழலில் அடுத்த அதிபராக கிம் சகோதரி கிம் யோ ஜாங் வருவார் அதற்கான ஏற்பாடுகள் தயாராகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சூழலில் கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங்
தலைநகர் யாங்யாங் அருகே சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தொடங்கி வைத்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உழைப்பாளர் தினமான (மே.1) நேற்று சன்சியானில் உள்ள பாஸ்பேட் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான புகைப்படங்களை வடகொரிய அரசின் கொரிய மத்திய செய்தி நிறுவனம்(கேசிஎன்ஏ) வெளியிட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் ரிப்பனை வெட்டியவுடன் அருகில் அனைவரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருந்தார் என்றும் அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு இதுபோன்று கிம் குறித்த பல்வேறு வதந்திகள் வந்தன, ஆனால் 6 வாரங்களாக மக்கள் மத்தியில் வராத கிம் பின்னர் வந்தார். ஆனால், கடந்த 20 நாட்களாக கிம் எங்கே சென்றார், எங்கிருந்தார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளாரா? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியான நிலையிலும், மர்மமே நீடித்து வருகிறது.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்