Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்றிலிருந்து இதுவரை 10 பேர் குணமடைந்துள்ளனர்.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்றிலிருந்து இதுவரை 10 பேர் குணமடைந்துள்ளனர்.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியான  வண்டிக்காரத் தெரு, சோகையன் தோப்பு பகுதிகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.  அவர் தெரிவித்ததாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,029 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 18 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 1,734 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 277 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவும், சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் 10 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு,  அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம்  செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் 13 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக  பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது.  இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை தடுத்திடும் வகையில் சாலைகளில் இரும்பு  தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில்  உள்ள பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள்  நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ளாட்சித் துறையின் மூலம் தினந்தோறும் காலை  மாலை என இரு வேளையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர  மாவட்டத்திலுள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்திட அலுவலர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இராமேஸ்வரத்திற்கு வருகைதந்த  வெளிமாநிலங்களை சேர்ந்த 185 நபர்கள் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

மேலும்  இராமேஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றின் காரணமாக சேதமடைந்த மீன்பிடி படகுகள் குறித்து ஆய்வு  செய்து, மீன்வளத்துறை மூலம் படகுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, இராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சி.அஜித் பிரபுகுமார், மீன்வளத்துறை துணை இயக்குநர்  பிரபாவதி, நகராட்சி ஆணையாளர்கள் என்.விஸ்வநாதன், ராமர், காவல் துணை  கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை, எம்.மகேஸ், வட்டாட்சியர்கள் முருகவேல், அப்துல் ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!