உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:-SDPI கட்சியின் மே தின வாழ்த்து..

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலையையும், எட்டு மணி நேர ஓய்வையும், எட்டு மணி நேர உறக்கத்தையும், தொழிலாளர் உரிமைகளையும் போராடிப் பெற்ற வெற்றியை மே தினம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.

உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் ஏராளமான தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், தொழிலாளி வர்க்கத்தை ஒப்பந்த மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வேலைபறிப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தற்போது மத்தியில் ஆளும் மோடி அரசு மேற்கொண்டு வருகின்றது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டும், அந்நிய முதலீடுகளுக்கு ஏதுவாகவும் தொழிலாளர் சட்டங்களில் மோடி அரசு மாற்றம் செய்து வருகின்றது. அந்த மாற்றம் என்பது இந்தியத் தொழிலாளர் சக்தியை முறைசாராத் தொழிலாளர்களாக மாற்றுகின்றன. இதன்மூலம் தொழிலாளர் உரிமைகள் ஏதுமின்றி, சட்டப் பாதுகாப்பின்றி, வேலைப் பாதுகாப்பு உத்தரவாதமின்றி, சுமாரான ஊதியம்கூட கிடைக்காத அவலத்திற்கு தொழிலாளர் வர்க்கத்தை மோடி அரசு தள்ளுகிறது.

அதுமட்டுமின்றி மோடி அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கைகள் காரணமாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நடவடிக்கை தொடங்கி, தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கை வரை முறையாக திட்டமிடப்படாத காரணத்தால் தொழில்துறை முற்றிலும் முடங்கிப் போனதோடு தொழிலாளர்களும் முடங்கிப் போயுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும், அடுத்த வேளைக்கு உணவினை எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டிய பரிதாபகரமான நிலை குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா முடக்கத்தால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 160 கோடி தொழிலாளர்கள் அதாவது 50% தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நாவின் உலகத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ எச்சரித்துள்ள சூழலில் தான் நாம் இந்த ஆண்டு மே தினத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, தொழிலாளர்களை காப்பாற்றுவது குறித்த எதிர்கால திட்டங்கள் அவசியமானது என்று ஐ.நாவின் உலகத் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கையுடன் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே, தொழிலாளர்கள் எதிர்கொள்ளவிருக்கும் பேரிடரிலிருந்து அவர்களை காக்கவும், அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் முறையான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, இந்த பேரிடர் காலத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவிக்கரத்தையும் அனைவரும் நீட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.