ஈரோடு மாவட்டத்தில் தனிமை பகுதிகளில் தளர்வு எப்போது?: தேதி விவரம் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்..!

ஈரோடு மாவட்டத்தில் தனிமை பகுதிகளில் தளர்வு எப்போது?: தேதி விவரம் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்..!

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எந்தெந்த தேதிகளில் விடுவிக்கப்படும் என்ற விபரங்களை கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த பகுதிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வந்தன. இங்கு தீவிர கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் அமலில் இருந்தது. அந்தந்த பகுதிகளில் கடைசியாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் தனிமைப்படுத்துதல் விதி தளர்வு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ரயில்வே காலனி, மரப்பாலம் பகுதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. கவுந்தப்பாடியிலும் தனிமைப்படுத்தும் விதியில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. கோபி நகராட்சி மற்றும் லக்கம்பட்டி பேரூராட்சி பகுதிகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.

சத்தியமங்கலம் நகராட்சி தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 5ம் தேதி ஈரோடு மாநகராட்சியில் மீராமொய்தீன் வீதி (வளையக்கார வீதி), மோசிக்கீரனார் வீதி, சாஸ்திரிநகர், கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு பகுதிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன. பி.பி.அக்ரகாரம் பகுதி வரும் 6ம் தேதி விடுவிக்கப்படுகிறது. நம்பியூர் அழகாபுரி பகுதி 10ம் தேதியும், கே.என்.பாளையம் பேரூராட்சி மற்றும் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் ஆகிய பகுதிகள் 13ம் தேதியும் விடுவிக்கப்படுகின்றன. தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மே 3ம் தேதி வரையான பொது ஊரடங்கு பொருந்தும்.அவர்கள் அந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலம் வரை தனிமைப்படுத்துதலில் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு மாறியது ஈரோடு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மொத்தம் 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 65 பேர் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து, கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு 70 பேர் பாதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் மாவட்டத்தில் உறுதிபடுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு ஈரோடு மாவட்டம் நேற்று மாற்றப்பட்டது. இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு புதிதாக நோய் தொற்று எதுவும் கண்டறியப்படாவிட்டால் பச்சை மண்டலத்திற்கு மாற்றப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..