புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நவாஸ்கனி எம்பி கோரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்றிரவு ஏற்பட்ட புயலினால் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.ஏற்கனவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக இரண்டு மாதங்களாக வருமானமின்றி தவிக்கும் மீனவர்களுக்கு, தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கை சீற்றம் கடும் சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.சேதமடைந்த விசைப்படகுகளை சீர்படுத்த ரூபாய் 3 லட்சம் வரை செலவாகும் என்பதால், 2 மாத காலமாக வருமானமின்றி தவிக்கும் மீனவர்கள், கூடுதல் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் படகுகள் நிறுத்தி வைப்பதற்கான ஜெட்டி பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.அதனை அரசு புதிப்பித்து, பராமரித்திருந்தால் இதுபோன்ற இயற்கை சீற்றங்களின் போது படகுகள் ஒன்றுக்கொன்று மோதி அடையும் சேதங்களை தவிர்த்திருக்கலாம்.எனவே, ராமேஸ்வரம் பகுதியில் ‘டீ’ வடிவ படகுகள் நிறுத்தி வைக்கும் ஜெட்டியை புதிதாக கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.மேலும் தற்போது ஏற்பட்டிருக்கும் சேதத்திற்க்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.விசைப்படகுகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை பழுதுபார்க்கும் செலவுகள் இருக்கும் என மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.கடந்த இரண்டு மாத காலமாக வருமானத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை, இந்தப் பேரிடர் காலத்தில் மேலும் துயரப் படுத்தாமல், உடனடியாக விசைப் படகுகளை பழுதுபார்க்கும் முழு செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.