தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1897)

மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், 1876ல், இளங்கலைப் பட்டத்தை பெற்றார். 1877ல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880ல் முதுகலைப் பட்டத்தையும் தத்துவத்தில் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885ல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

தமிழ் இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அன்றைய ஐரோப்பிய அறிஞர்களிடையே நிலவிய இன மையவாதக் கண்ணோட்டம் நிலவியது. அதன் விளைவாக காலத்தை முன்தள்ளுவதிலும் பின்தள்ளுவதிலும் அறிவுக்குப் பொருத்த மில்லா வாதங்கள் நிலவின. அந்த நிலையில் நியாயத் தருக்க முறைப்படி திருஞானசம்பந்தர் காலத்தை கி.பி. 7ஆம் நூற்றாண்டு எனச் சுந்தரனார் நிறுவினார். இது தமிழ் இலக்கியங்களின் காலவரிசையைத் தெளிந்து கொள்வதில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்தியது. . ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணியம் இவரால் 1891ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர். இத்தொடர்பே மனோன்ணியத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது. சுந்தரனாரின் படைப்புகளில் மனோன்மணியம் நாடகமே சுந்தரனாரைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகம் நினைவில் வைத்துக்கொள்ள காரணம். இந்த நூல் இன்றுவரை தமிழ்க் கல்வியில் நாடகப் பனுவல் பாடநூலாக இருந்து வருகிறது. இந்த நூலில் ஒரு விதமான நவீன தேசிய உணர்ச்சி தெரிவதாக வையாபுரிப் பிள்ளை எடுத்துக் காட்டியுள்ளார்.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894ம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார். மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970ல் அறிவிக்கப்பட்டது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (திருஞான சம்பந்தரின் காலம்)’ என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை ‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘ஜீவராசிகளின் இலக்கண மும் பிரிவும்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார். மற்ற மொழிகளையும் இவர் ஒதுக்கியதில்லை. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றிவந்தார். ‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றுள்ளபோதிலும், தான் எழுதிய நூலின் பெயரால் ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என்று போற்றப்பட்டார்.

சுந்தரனார் மேற்கத்திய அறிவுப்பரப்பை ஆர்வத் தோடு வரவேற்று உள்வாங்கிக் கொண்டாலும், தமிழ் மரபில் நின்றே யோசிக்கிறார் போலத் தெரிகிறது. அறிவுத் துறைகளை வகைதொகைப்படுத்தி விளக்கும் முறை இதனை உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் நூற்றொகை விளக்கம் சூத்திரங்களுக்கு எழுதிய விளக்கவுரையிலும் மரபான அத்வைத மரபிலோ, சித்தாந்த மரபிலோ நில்லாமல், ஆனால் அதே வேளையில் மேற்கத்திய தத்துவ மரபிற்குள்ளும் கரைந்து போகாமல், அறிவு, அறிவுப் புலங்கள் பற்றியெல்லாம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களைப் போன்று முழுதளாவிய நோக்கில், புதிய வகையில் தமது சொந்த மரபுநிலை நின்று சிந்தனை செய்கின்றார். இந்த விசயம் பற்றி மேலும் இலக்கிய மாணவர்களும், வாசகர்களும் சிந்திப்பதற்கான வெளி திறந்து கிடக்கிறது. அதற்கு அ.கா.பெருமாள் எழுதியுள்ள நூல் துணை செய்யும். மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் என்ற சிறிய, அறிவார்ந்த நடையில் எழுதப்பட்ட நூலே இப்படியான புதிய பரப்புகளுக்கு உந்தித்தள்ளும்.

வாழ்வின் இறுதிக் காலத்தில், தான் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்கு ஹார்வி புரம் எனப் பெயர் சூட்டினார். தனக்கு உதவிய தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்விக்கு நன்றி செலுத்தவே இப்பெயரை தேர்ந்தெடுத்ததாக கூறினார். 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் நாடக நூலை எழுதியவரும், கல்வெட்டு ஆராய்ச்சி, தத்துவம், அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பெ.சுந்தரம் பிள்ளை ஏப்ரல் 26, 1897ல் தனது 42வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..