இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்! ரமலான் சிந்தனை-2.

ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும்.

ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் கவலை கொண்ட மனிதர்களும் நம்மிடம் உண்டு.

ரமலான் காலத்து நோன்பு கடமையும் அதன் மூலம் நாம் செய்ய போகும் இன்னபிற வணக்கங்களும் நம்மை படைத்த இறைவனின் திருப்திக்கானதாகும், அதற்கான உயர்வான நற்கூலியை இறைவனே நமக்கு அருள்புரிய இருக்கிறான்.

இறைவன் எதிர்பார்ப்பது நாம் அணியும் புத்தாடைகளல்ல, நமது உள்ளத்தில் இருக்கும் புத்துணர்ச்சி கலந்த இறைச்சிந்தனை மட்டுமே, ரமலான் காலத்தில் நோன்பு வைப்பதற்கான உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் மக்களுக்கு மத்தியில் அல்லாஹ் நமக்கு உணவையாவது தடையின்றி தந்தானே என்ற திருப்தி புத்தாடையில்லையே என ஏங்கும் மக்களிடம் இருக்க வேண்டும்.

இருப்பதை கொண்டு திருப்தி கொள்வதும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் தான், ஒருமுறை அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் படுத்திருந்தார்கள்; அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் வீட்டினுள் அனுமதி பெற்று நுழைந்தார்கள்.

உமர்(ரலி) கண்டவுடன், நபியவர்கள் படுக்கையை விட்டு எழுந்தார்கள்; அவர்கள் படுத்திருந்த முரட்டு விரிப்பின் அடையாளம் அண்ணலாரின் உடலில் பதிந்திருக்கக் கண்டார்கள் உமர்(ரலி) அவர்கள்; தாம் வந்த பணியை மறந்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! இதைவிட மென்மையான விரிப்பு ஒன்றைக் கொண்டு வரட்டுமா? எனக்கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எனக்கும் இந்த உலகிற்கும் இடையில் இருக்கும் தொடர்பு, வழிப்போக்கன் ஒருவனைப் போன்றதாகும்; அவன் தன் பயணத்தின் போது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவான்; சிறிது ஓய்வெடுத்துவிட்டு அந்த மரத்தின் நிழலை விட்டு வெளியேறி மீண்டும் பயணத்தை தொடர்வான்; அது போன்றதே எனது வாழ்க்கையும் என்றார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள். (நூல்:முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், இப்னுஹிப்பான்)

நபிகளாரின் தகைமைக்கு வளமான வாழ்க்கை கிட்டும் தகுதியிருந்தது; ஆனால், அதை விரும்பாத அண்ணலார்(ஸல்) அவர்கள், தமக்கு எளிமையான வாழ்க்கையே போதும் என்று அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றார்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டார்கள்.

தம்மிடம் இருந்தவற்றை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, எஞ்சியதை சாப்பிட்டார்கள்; மற்றவர்களுக்கு கொடுத்து மீதமில்லாமல் போனால், நபிகளாருக்கும் அவர்களது வீட்டாருக்கும் அன்றைய பொழுது பட்டினியோடு தான் கழியும்.

பொறுமைக்கு பொருத்தமான முன்மாதிரியாக வாழ்ந்த அண்ணலாரின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஒருவர், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டபோது, நபியவர்களும் அவர்களது குடும்பத்தாரும் தொடர்ந்து மூன்று நாட்கள் கோதுமை ரொட்டியை சாப்பிட்டதில்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்படியானால், அந்த மூன்று நாட்களும் எப்படி கழிந்தது? என்று வந்தவர் கேட்டார், கோதுமை ரொட்டிக்கு மாவு கிடைக்காத அந்த மூன்று நாட்களிலும் “பேரீச்சம் பழமும் தண்ணீரும் தான் எங்களின் உணவாக இருந்தது என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.(புகாரி-6094, முஸ்லிம்-2972)

மக்காவின் சீமாட்டி அன்னை கதிஜா பிராட்டியாரிடம் இருந்த அளவில்லா சொத்துக்களை எல்லாம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திய அண்ணலாரின் வாழ்க்கையும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்க்கையும் ஏழ்மையாகவும்,எளிமையாகவுமே இருந்ததை பல்வேறு வரலாற்றுகளில் காணலாம்.

இருப்பதை கொண்டு திருப்தி கொள்வதுதான் அண்ணலாரின் வாழ்வியல் நமக்கு கற்றுத்தந்த பாடமாகும்!

தற்போதைய கொரோனா ஊரடங்கினால் தினக்கூலிகளாய் வாழ்ந்து வந்த எத்தனையோ ஏழை எளிய மக்கள் வருமானமின்றி தங்களின் அன்றாட சஹருக்கு கூட உணவின்றி பரிதவிக்கும் சூழலை கவனத்தில் கொண்டு தம்மிடமிருக்கும் உணவில் சிலதையாவது அவர்களுக்கு வழங்கி கிடைத்ததைக் கொண்டு அவர்களும், இருப்பதைக் கொண்டு நாமும் திருப்தி கொள்ள வேண்டும்.

இந்த புனிதமான ரமலான் காலங்களில் ஏழைகளோடு நமது உணவுகளைப் பகிர்ந்து கொண்டு, அண்ணலாரின் அன்புக்கும் இறையோனின் அருளுக்கும் உரிய நன்மக்களாய் வாழ்வோம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி.