வதந்“தீ”கள் வேண்டாம்..: பாதித்த உறவினரின் வேண்டுகோள்..

கொரோனொ வைரஸால் உலகம் முழுவதுமர பாதிக்கப்பட்ட நிலையில், கோடீஸ்வரன் முதல் அன்றாட வருமானம் உடையவர்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  கீழக்கரையைச் சார்ந்த ஒருவர் இறந்த பின்பு கொரோனோ வைரஸ் பாதித்துள்ளது என்ற முடிவு வெளியானதை தொடர்ந்து பல்வேறு யூகங்கள், வதந்திகள் என பரவி வருகிறது, இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கோரிக்கை தங்களின் பார்வைக்கு..

அஸ்ஸலாமு அலைக்கும். !

கீழக்கரை வாழ் பொதுமக்களுக்கு மக்கள் டீம் காதர் ஆகிய நான் ஸலவாத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கீழக்கரை ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சின்னக் கடைத்தெரு பீலீ ஜமால் அவர்களின் மரணம் பற்றி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டி இப்பதிவு.
‌‌
இறந்து போன பீலீ ஜமால் அவர்கள் எனது மனைவியின் பெரிய தந்தை. அதாவது எனக்கு பெரிய மாமனார். இவர் பிரபலமானவர் என்று சொல்வதை விட இறக்க சிந்தனையும் ஏழைகளுக்கு உதவும் நல்ல மனம் கொண்டவர்.நான் பார்த்த வகையில் கையில் பணம் இல்லாவிட்டாலும் பிறகு வாருங்கள் என கூறாமல் அருகில் உள்ளோரிடம் கடன் பெற்று கூட, கேட்டவருக்கு பணமோ, பொருளோ பெற்று அன்றய தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் இளகிய மனம் கொண்டவர். தோல்விகள் பலவற்றையும் வெற்றிப்படியாக்கிய படிப்பறிவில்லாத சாதனையாளர். ஊரின் பெருமையை மெருகூட்ட பாடுபட்ட பலரில் இவரும் ஒருவர்.பல்வேறு பெருமைகள் போற்றுதலுக்கு சொந்தக்காரர் இன்று சிலர் உண்மை தெரியாமல் பேசுவதும் சமூக வலை தளங்களில் அவதூறு பரப்புவதும் அநாகரிகமான செயல்.

சென்னை, பவளக்காரத் தெருவில் சொந்த வீட்டில் 2மகன் 3மகள்களுடன் வசதியாக வசித்து வருகிறார். அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருபவர். இதனால் வெளிநாடு திரும்பியவர்கள் அனைவரது வீட்டிலும் மாநகராட்சியால் ஒட்டப்படும் தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் ஸ்டிக்கர் இவரது வீட்டிலும் ஒட்டப்படுகிறது. இதற்கிடையில் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அனுமதி பெற்று கீழக்கரையில் உள்ள தமது வீட்டிற்கு வந்து இருதினங்களுக்கு பின் சென்னை செல்கிறார்.

கடந்த 02.04.2020 அன்று அதிகாலை வழக்கத்திற்கு மாறாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு தன் மனைவியிடம் கேட்டுக்கொள்கிறார். அவர்களும் வீட்டின் அருகே உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் வெளி நோயாளியாக சேர்க்கின்றனர். அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கையில் இரண்டு மாடிகள் நடந்தே வந்து வாகனத்தில் ஏறுகிறார்.

மருத்துவமனையில் மதியம் இறந்துவிட்டதாக கூறி அரசு மருத்துவமனை நடைமுறைகள் முடிந்து ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்புவிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச அமரர் ஊர்தியின் மூலம் ஆம்புலன்ஸ் நடைமுறை விதிகளின் படி மூன்று வாகனங்களுக்கு மாற்றப்பட்டு அன்னாரின் ஜனாஸா 03.04.20 அன்று அதிகாலை 03.00மணிக்கு கீழக்கரை வந்து காலை 10.00 மணி அளவில் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் நடைபெறுகிறது.
‌‌

அதன்பின் 05ம் தேதி காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இராமநாதபுரம் சுகாதார துறை அதிகாரிகளுக்கு இறந்து போன ஜமால் அவர்களின் இரத்த பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆக உள்ளது என தகவல் தந்துள்ளனர்.
இதனால் அரசு இயந்திரம் துரிதமாக செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இதை பார்த்தவர்களின் மனநிலையில் பல்வேறு சந்தேகத்தின் வெளிப்பாடுகளே சமூகவலைத்தளங்களின் வதந்திகள்.

இந்த நேரம் வரை இறந்து போன பீலீ ஜமால் குடும்பத்தினர் அவரை சார்ந்தோர் யாருக்கும் எவ்வித பரிசோதனைகளும் நிகழவில்லை. இனிமேல் நடக்குமா என்பதும் தெரியவில்லை. அவரது மனைவி மகன் உட்பட அனைவரும் நலமுடன் உள்ளனர்.ஆனால் அரசு நிர்பந்தத்தால் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் அடக்கம் செய்த உடலை பரிசோதனைகளோ தோண்டவோ செய்யவில்லை.

இதில் அவர்களின் தவறு என ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சென்னையில் அடக்கம் செய்யலாமே என்ற கேள்விக்கு இறந்து போனவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். 5பிள்ளைகளின் சம்பந்தபுறமும் சுற்றியுள்ள உறவினர்களும் ஏராளம்.இவரால் பலனடைந்த பலரும் இவரது கடைசி காரிய நிகழ்வுக்கு பங்கேற்க சென்னை வருவதாக அரசு அனுமதி பெற்று தர நிர்பந்தத்தால் அவர்கள் ஜனாஸாவை சொந்த ஊருக்கு பெருஞ்சிரமப்பட்டு கொண்டுவந்துள்ளனர். பெரிய தலைவர்கள் கூட இது அரசு செய்த தவறு என்பதை சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆகவே வருத்தப்பட்டு வார்த்தைகளை வீசாமல் உண்மையை தெரிந்து கொள்வீர்.

சமூக ஆர்வலர்களுக்கும், தன்னார்வ தொண்டு செய்வோர், கட்சியினர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் : நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கியதைப் போல் முன்னெச்சரிக்கை மருந்து மாத்திரைகள் அலோபதி ஹோமியோபதி நாட்டு மருந்துகள் எதுவானாலும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை இலவசமாக தர வேண்டிக்கொள்கிறேன்.

இந்த கோரிக்கை பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image