கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள 571 பேரில், 507 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 90,824 பேர், அரசின் தனிமை முகாமில் இருப்பவர்கள் 127 பேர், சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள் 38 இலட்சம் பேர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறி இருக்கிறார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள 571 பேரில், 507 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட டிசம்பர் மாதத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி, தொழில் நிமித்தமாகச் சென்றோர் மற்றும் சுற்றுலா பயணிகள் இலட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி இருக்கின்றனர். விமான நிலையங்களில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்படுவதற்கு முன்பே இவர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவரையும் கண்டறிந்து தமிழக அரசின் சுகாதாரத் துறை பரிசோதனை நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த எட்டு கோடி மக்கள் தொகையில், வெறும் 38 இலட்சம் பேர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், வெறும் 4612 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் தெரிகிறது. இரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியும்.

கொரோனா தொற்று சென்னை, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், சேலம், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, சிவகங்கை, வேலூர், தஞ்சை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 32 மாவட்டங்களில் பரவி இருப்பதாக தமிழக அரசு கூறி இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது. அடுத்த நிலைக்குப் போகவில்லை என்று அரசு தரப்பில் திரும்பத் திரும்பக் கூறுவது மக்களிடையே மேலும் அலட்சியப் போக்கு உருவாகவே வழி வகுக்கும். மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கும் நிலை இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்தச் சூழலில் கொரோனா தொற்று தீவிரத்தின் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்துவதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகப் பரவலிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.

துபாய் நாட்டிலிருந்து திரும்பிய இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்ரல் 2 ஆம் தேதி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், மூச்சுத் திணறல் காரணமாக கிசிச்சை பெற்றார் என்று ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் மருத்துவர்கள் அவரது இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவரின் உடலை கீழக்கரை எடுத்துச் சென்று, இறுதி மரியாதைக்காக அவரது வீட்டில் வைத்துள்ளனர். தொழிலதிபர் என்பதால் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இறுதிச் சடங்கில் 300 பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

எல்லாம் முடிந்த பிறகு, இறந்தவரிடம் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியோர், இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்யும் முயற்சி நடக்கிறது.

இறந்தவரின் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்குக் காலதாமதம் ஆனது ஏன்? ஆய்வுக்கூட முடிவு வருவதற்கு முன்பு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது ஏன்?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பாராட்டுக்குரிய வகையில் அர்ப்பணிப்புடன் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் நேரம், காலம் பாராது சேவை புரிந்து வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்ததைப் போன்ற நிகழ்வு இனி தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8 06.04.2020

புனித ரமலான் வாழ்த்துக்கள்..