இறந்தவர் உடலில் இருந்து கொரானா வைரஸ் பரவுமா??.. தவறான புரிதல்களும்… அறிந்து கொள்ள வேண்டிய விசயங்களும்… அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகள் என்ன? அறியலாம் வாங்க.!

இறந்தவர் உடலில் இருந்து கொரானா வைரஸ் பரவாது என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு செய்திருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் சரியானதா அல்லது தவறானதா என்கிற விவாதங்களை தவிர்த்து, கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் விஷயத்தில் நாம் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும். உலக அளவில் கொரானாவால் அதிக பலி எண்ணிக்கையில் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் ஜெர்மனி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.

அவ்வளவு ஏன், நம் தமிழ் நாட்டில் கொரானாவால் பாதிப்புக்குள்ளாகி இறந்தவரின் இறுதி சடங்கு எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பு உபகரணங்களுடன் குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்ட குடும்ப அங்கத்தினர்களுடன்  எவ்வாறு நடைபெற்றது என்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்.

இங்கிலாந்து நாட்டில் கொரானா பரவ துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே இதற்கென தனியாக கொரானா வைரஸ் சட்டம் 2020 என்று, அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி சட்டமே உருவாக்கி அதன் வழிமுறைகள் படி, கொரானா நோயாளிகளை அணுகுவதில் இருந்து அடக்கம் செய்யும் வரை கடைபிடிக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டு அதன் படி செயல்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகள் எதிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எப்போதும் வழக்கமாக நடைபெறுவது போல் அவரவர் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் செய்யப்படும் சடங்குகளை செய்வதில்லை.மாறாக அந்தந்த நாடுகளின் அரசாங்கம் அறிவுறுத்தும் கட்டுப்பாடுகள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. நம் இந்தியாவிலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த மார்ச் 15 அன்றே, கொரானாவால் உயிரிழந்த உடல்களை எவ்வாறு கையாள வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகவே கொரானாவால் உயிரிழந்த எவரையும் சர்வ சாதாரணமாக சகல மரியாதையோடு நல்லடக்கம் செய்யும் தருணம் இதுவல்ல.

உலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய நோயாக கண்டறியப்பட்டு இருப்பதால், சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கொரானா தொற்றுள்ள உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து பல வதந்திகளும் தவறான தகவல்களும் சமூக ஊடக தளங்களில் பரவி வருகின்றன. இதைத் தடுக்க, இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது குடிமக்களுக்காக பின்வரும் இந்த  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலில் கொரோனாவால் இறந்த உடல்களை  மருத்துவ பணியாளர்களும், இறந்தவரின் குடும்பத்தினரும் எவ்வாறு தங்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் கையாள்வது என்பதை தெளிவாக சொல்லிருக்கிறது.

அதுமட்டுமல்லாது கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை எவ்வாறு கொரோனா  வார்டில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்வது, பிணவறையில் எவ்வாறு இறந்த உடலை பராமரிப்பது, பிரேதத்தை எவ்வாறு அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்புவது, அடக்கம் செய்யும் போது என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.

அடக்கம் செய்யும் இடுகாடுகளில் கடைபிடிக்க வேண்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கும் எட்டு கட்டளைகள் உங்கள் பார்வைக்கு :

1. சரியான முறையில் மூடிபிரத்யேக பிளாஸ்டிக் பையில் உரையிடப்பட்ட இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நபர்கள், சுகாதார ஊழியர்கள் தங்களுக்கு கூடுதல் ஆபத்து இல்லை என்பதை உணர வேண்டும். 2. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நபர்கள் உரிய முகக்கவசம், கையுறை உள்ளட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் மிகக் கவனமுடன் இருப்பதோடு கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 3. பிரத்யேக பிளாஸ்டிக் பையில் மூடப்பட்டுள்ள பிரேதத்தினை குடும்பத்தினர் கடைசியாக ஒரு முறை மட்டும் முகத்தை மட்டும் தூரத்தில் நின்று திறந்து பார்க்க அனுமதிக்கப்படலாம். 4. பிரேதத்தின் அருகாமையில் தகுந்த இடைவெளி விட்டு நின்று, பிரேதத்தை தொடாமல், அவரவர் மத சம்பிரதாயங்களின் பிரகாரம் வேத வசனங்களை ஓதவோ, தொழுகை நடத்தவோ செய்யலாம். 5. பிரேதத்தை குளிப்பாட்டவோ, முத்தம் கொடுக்கவோ அல்லது கட்டி அணைக்கவோ கூடாது. 6. அடக்கம் செய்து முடித்த பின்னர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 7. பிரேதம் எரியூட்டப்பட்டிருப்பின் அதன் சாம்பலை எடுத்து மத சம்பிரதாயங்களை செய்யலாம். 8. அடக்கம் செய்யும் இடத்தில் கும்பலாக நிற்காமல் சமூக இடைவெளி விட்டு நிற்பது நல்லது. ஏனெனில் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களிடம் நோய் தொற்று இருக்குமானால், அவர்கள் மூலமாக வைரஸ் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.          

மேலே உள்ள விசயங்களை கடைபிடித்து இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தால் மட்டுமே இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனோ தொற்று நோய் பரவாது என்பதை உறுதியாக கூறமுடியும்.  ஆகவே முழு விபரம் தெரியாமல் குழப்பம் உண்டாக்க வேண்டாம்

ஆகவே நாம் அனைவரும் கொரானா குறித்த அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வு பெறுவதோடு, வீண் வதந்திகளை பரப்பாமல், சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்து, நம்மையும் நம் குடும்பத்தையும், நம் அக்கம் பக்கத்தினரையும்,  நம் தெருவையும், நம் ஊரையும், நம் தேசத்தையும் காக்க அனைவரும் முன் வர வேண்டும். இறைவன் நம் அனைவரையும் இந்த கொடிய உயிர்கொல்லி கொரானா வைரஸ் இடம் இருந்து காப்பாற்றுவான்.

To Download the Guide CLICK HERE

புனித ரமலான் வாழ்த்துக்கள்..