பொறுப்பற்ற மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மக்கள் நல பாதுகாப்பு கழகம், வீரகுல தமிழ் படை இயக்கம் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை..

மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளரும், கீழக்கரை நகராட்சி முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சேர்ந்த 71 வயதுள்ள முஹம்மது ஜமாலுதீன் என்ற பெரியவர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையான ஸ்டாலின் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு கடந்த 1ம்தேதி உயிர் இழந்தார். அவரின் உடல் கீழக்கரைக்கு கொண்டு வரப்பெற்று 2ம்தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் சென்னை ஸ்டாலின் மருத்துவமனயில் எடுக்கப்பட்ட அவரின் இரத்த மாதிரியில் அவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இன்று கீழக்கரை பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு உடலை கொடுக்கும் போது கொரோனா தொற்று இல்லை என்று சான்று வழங்கி விட்டு உடல் அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழித்து கொரோனாவில் இறந்ததாக கூறுகின்றார்கள். இதனால் ஏற்கனவே கொரோனா சம்பந்தமான அச்ச உணர்வில் வாழும் இந்த மக்கள் கூடுதல் பயத்துடன் காணப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சென்னை ஸ்டாலின் மருத்துவமனை மருத்துவர்களின் மெத்தனப் போக்குதான். இந்த சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள், சான்று வழங்கிய லேப் டெக்னீஷியன்களை கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்ய எங்கள் கழகம் சார்பாகவும், கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும் தமிழ் நாடு அரசையும்,தமிழக சுகாதாரத்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல் வீரகுல தமிழ்படை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே அவரது உடல் அவரது சொந்த ஊரான கீழக்கரைக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட அவரது மாதிரியில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் தான் துபாயில் இருந்து வந்த அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலும் அவரது பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே உடல்நல குறைவால் அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை ஒப்படைத்துள்ளது. அவரது இறுதி நிகழ்விலும் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால் பலருக்கும் நோய் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் அந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகி உள்ளது. இத்தனைக்கும் காரணம் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாத்தின் மெத்தன போக்கே. உடனடியாக தமிழக அரசு ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் கீழக்கரை மக்களின் அச்சத்தை போக்க வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில் “ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு கொரானா அச்சம், வெளிநாடுகளில் வெளி ஊர்களில் இருந்து கீழக்கரைக்கு செல்ல முடியாமல் கவலையுடன் சிக்கித் தவிக்கும் சொந்த பந்தங்கள் என.. கீழக்கரை மக்கள் தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் வலி நிறைந்த கனத்த இதயத்தோடு.. இன்னும் சில காலங்களை மிகக் கவனமுடனும் கட்டுப்பாட்டுடனும் கடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பற்ற கையாலாகாத் தனத்தால், ஒரு ஊரே மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு சென்று திரும்பி, கொரானா அறிகுறியுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு, பரிசோதனையில் கொரானா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்கிற முடிவு வருவதற்கு முன்னர், இறந்த ஒருவரின் உடலை எவ்வித முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு அம்சங்களும் இன்றி அறுநூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சொந்த ஊரான கீழக்கரைக்கு அனுப்பியது ஏன்..?? என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. இது சம்பந்தமாக காவல் துறை உயர்மட்டக் குழுவும், பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த அசாதாரண சூழலில் தமிழக அரசுக்கும், சுகாதார துறைக்கும் மற்றும் காவல் துறைக்கும் கீழக்கரை பொதுமக்களும், மறைந்த முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் குடும்பத்தாரும், இறப்பு சடங்கில் கலந்து கொண்ட உறவினர்களும், தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.” இவ்வாறு தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..