மடக்கை அட்டவணை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர், இயற்பியலாளர் ஜான் நேப்பியர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1617).

ஜான் நேப்பியர் (John Napier) ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள எடின்பா்க் நகரின் அருகே அமைந்துள்ள “மொ்சிஸ்டன் காஸில்” என்னும் இடத்தில், 1550ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய பதிமூன்றாவது வயதிலேயே ஆண்ட்ருஸ் பல்கழைக்கழத்தில் சேர்ந்தார். எனினும் அங்கு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவா் பட்டம் எதுவும் பெறாமலே அக்கல்லூரியை விட்டு விலகினார். நேப்பியர் அதன் பிறகு பல வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றார். 1571ம் ஆண்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார். 1572ம் ஆண்டு நேப்பியரின் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது மனைவி ஏழு ஆண்டுகளில் மரணம் அடைந்தார். எனவே அவர் மறுமணம் புரிந்தார். நேப்பியர் கிறிஸ்தவ மதத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் ரோம் நகரிலுள்ள தேவாலயம் பற்றிய நூல் ஒன்றையும் எழுதினார்.

நேப்பியரின் பெரும்பாலான வாழ்க்கை கணித ஆராய்ச்சியிலேயே கழிந்தது. கூட்டல், கழித்தல், வர்க்க மூலத்தைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படும் கருவி ஒன்றை நேப்பியர் கண்டுபிடித்தார். அக்கருவி அவரது பெயரிலேயே “நேப்பியர் ராடு” என்று அழைக்கப்படுகிறது. கணித உலகில் “மடக்கை” (Logrithms) என்னும் பிரிவு மிகவும் முக்கியமானதாகும். அதனைக் கண்டுபிடித்த பெருமை நேப்பியரையே சாரும். நேப்பியர் இல்லையென்றால் கணித உலகிற்கு மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணையும் (Logrithm Table) கிடைத்திருக்காது. நேப்பியர் பின்ன எண்கள், அதிக இலக்க எண்கள் போன்றவற்றை பெருக்குவதற்கு, வகுப்பதற்கும் மடக்கை விதிகளைப் பயன்படுத்தி மிக விரைவாகவும், எளிதாகவும் விடைக் கண்டார். இன்றளவும் உலகெலுங்கிலு முள்ள பள்ளிகளில் மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணைகளும் பயன்பட்டு வருகின்றன. கணிப்பொறி உலகில் அறியப்படுவதற்கு முன் பெரும்பாலான கணக்கு வழக்குகளில் மடக்கை அட்டவணையே (Logrithm Table) பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய கணினி யுகத்தில் கூட மடக்கை அட்டவணையின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகும். ஏனெனில், மடக்கை அட்டவணை மிக எளிதானது மட்டுமின்றி, சிக்கனமானதும் ஆகும். உதாரணமாக, இரு அதிக இலக்க எண்களைப் பெருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவ்வதிக இலக்க எண்களுக்கு மடக்கை அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட எண்கள் தரப்பட்டிருக்கும். இரு அதிக இலக்க எண்களைப் பெருக்குவதற்கு அவ்வெண்களின் மடக்கை எண்களை அட்டவணை மூலம் கண்டறிந்து, அவற்றைக் கூட்டி, கிடைக்கப்பெறும் எண்ணிற்கு எதிர்மடக்கை எண்ணைக் (Antologrithm) கண்டால் அதுவே பெருக்குத் தொகை விடை ஆகும்.

கணிதத்தில் மடக்கை விதி (Logrithm) அதைக் கண்டுபிடித்த கணித மேதை நேப்பியரின் பெயரிலேயே அழைக்கப்படுவது நேப்பியருக்கு கிடைத்த பெருமையாகும். மடக்கைகள், நேப்பியரின் எலும்புகள் என்ற எண்சட்டம், தசமப் புள்ளிகளை பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைக்காக இவர் நினைவு கூரப்படுகிறார். நேப்பியரின் பிறந்த இடமான மேர்சிஸ்டன் அரண்மனை தற்போது நேப்பியர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஜான் நேப்பியர் ஏப்ரல் 4, 1617ல் எடின்பரோ, ஸ்கொட்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..