Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 3.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.

by ஆசிரியர்

இராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித்தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ  ராவ் இன்று (ஏப்.2) பார்வையிட்டார்.  அவர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் நலனுக்காக அனைத்து அரிசி  பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (ஏப்ரல் 2) முதல் கொரோனா உதவித்தொகையாக ரூ.1,000/ மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சீனி, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்  ஆகியவற்றை விலையின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த நியாய விலைக் கடைகளில் மொத்தம் 3,64,874 அரிசி குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசால் ரூ.36,48,74,000 நிதி விடுவிக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை 10 நாட்களுக்குள் முழுமையாக நிறைவேற்ற  திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் விதமாக 10 முதல் 15 நியாய விலைக்கடைகளுக்கு ஒரு  கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டும், துணை ஆட்சியர் நிலையில் வட்டார அளவில் மண்டல  அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில்  மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க, குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரம்  ஒதுக்கீடு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது. நியாய விலைக்கடைகளுக்கு வரும் மக்கள் 2 மீட்டர் வரை சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் பொதுமக்கள் அவ்வப்போது தங்களது கைகளை சோப் மற்றும் கிருமி நாசினி  கொண்டு சுத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பரமக்குடி நகராட்சி, எமனேஸ்வரம் பகுதியில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா  வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.  இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ், கூட்டுறவு  சங்கங்களின் இணை பதிவாளர் (பொ) டி.கே.பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!