மக்களிடையே விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குற்றச்சாட்டு..

மக்களிடையே விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது குறித்து கா. நவாஸ்கனி எம்பி கூறுகையில், “மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய மக்கள் பிரதிநிதிகளை  மார்ச் 23 வரை நாடாளுமன்ற கூட்ட தொடரிலும், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் கூட்டமாக அரசே ஒன்று கூட்டிவிட்டு, மக்கள் ஒன்று கூடல் தான் கொரோனா பரவலுக்கு காரணமென கூறுவது ஏற்புடையதல்ல. கொரோனா நோய்த்தொற்று பற்றி தற்போது எடுத்துள்ள விழிப்புணர்வை ஒரு மாதத்திற்கு முன்பு எடுத்து இருந்தால் இப்படி ஒரு பேரிடரை இந்தியா சந்தித்திருக்காது.

அதனைத் தவற விட்டுவிட்டு டில்லி நிஜாமுதீன் மர்கஸ், சத்குரு ஈஷா நிகழ்வு போன்ற மத நிகழ்வுகளால் நோய் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. சீனாவில் நவம்பர் மாதம் தொடங்கி, உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று கடந்த ஜனவரி மாதம் முதலே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது,  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை போன்ற மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை அரசே நடத்திவிட்டு, தற்போது மத நிகழ்வுகளை வைத்து அரசியல் நடத்துவதை கண்டிக்காமல் விடுவது எந்த விதத்தில் நியாயம் என மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

ஒட்டு மொத்தமாக முன்னதாகவே விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியது மத்திய, மாநில அரசுகள் தான் என்பதை ஏற்றுக்கொண்டு, வீரியமாக இதனை எப்படி கையாள்வது என்பது குறித்த ஆக்க பூர்வமான செயலில் ஈடுபட வேண்டுமே தவிர, இதற்குள் மதங்களை கொண்டுவருவது மனிதாபிமானமற்ற செயல். மக்கள் பிரதிநிதிகளேயே அரசு ஒன்று கூட்டும் போது, மக்கள் மட்டும் எப்படி பொது நிகழ்வுகளை தவிர்த்து இருப்பர். இதனை தவற விட்டது மத்திய மாநில, அரசுகள் தான்.

எனவே தற்போது சூழ்ந்திருக்கும் பேரிடரிலிருந்து ஒட்டு மொத்தமாக, இந்தியனாக எப்படி நம் தேசத்தை பாதுகாப்பது என்பது குறித்து செயல்பட வேண்டுமே தவிர, இதற்குள் மத துவேஷங்களை நுழைக்க கூடாது. கண்ணுக்குத் தெரியா வைரஸிலும் மதங்களை கொண்டுவரும் அருவருக்கத்தக்க அரசியலை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமாக இதனை வெல்ல முயற்சிக்க வேண்டும்.

அதே போன்று மக்கள் ஒன்று கூடல் நிகழ்வுகளில் பங்கேற்றோர் யாராக இருந்தாலும் அவர்களை கொரோனா பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். இது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மட்டுமின்றி நாம் சார்ந்திருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பளிப்பதாக அமையும். மத துவேஷ கருத்துகளை பரப்பும் சமூக குற்றவாளிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும். அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.சமூக வலைதளங்களில் விஷமப் பிரசாரம் மேற்கொள்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பாகுபாடுகளை கடந்து, அனைவரும் இணைந்து , நல்லிணக்கத்துடன இப்பேரிடரில் இருந்து நம் தேசத்தை மீட்டெடுப்போம்.

இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கும், ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதார சரிவிலிருந்தும் நம் நாட்டை மீட்டெடுக்க, வரக்கூடிய காலங்களில் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். இது போன்ற மத துவேஷ அரசியலை கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..