இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்… தனிப்பிரிவு போலீஸ் அதிரடி நடவடிக்கை..

தமிழக அரசின் உத்தரவின்பேரில் அனைத்து  அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து, மதுபானக்கடை பார்கள்  தொடர்ந்து மூடப்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்ட விரோதமாக சில்லறை  மது விற்பனையில் ஈடுபடுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண். 94899 19722 என்ற எண்ணிற்கு ரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, அதிரடி நடவடிக்கையால் கடந்த 22.3.2020-ம் தேதி முதல் இன்று (25.3.2020) வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 3,954மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வரப்படுகிறது.

இராமநாதபுரம் 475, பரமக்குடி 318, கமுதி 647, இராமேஸ்வரம் 1175, கீழக்கரை 571, திருவாடானை 200, முதுகுளத்தூர் 300, இராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு 125, கமுதி மதுவிலக்கு பிரிவு 143 என 3,954 இதில், 24.3.2020-ம் தேதியன்று கமுதி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட  பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 635 மதுபாட்டில்கள்  தனிப்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படியாக  கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறைகளை மீறி அவர்களுக்கு  உதவியாக செயல்படும் அரசு மதுபானக்கடை ஊழியர்களும் வழக்குகளில் எதிரிகளாக  சேர்க்கப்படுவர்.

தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால், தமிழக அரசால் 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறும் பார்களில் 5-ம் மேற்பட்ட நபர்கள்  கூட வாய்ப்புள்ளதால், நோய் பரவும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்று சட்ட  விரோதமாக செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இந்நிலையில், இராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோவில்,  இராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் திருவாடானை ஆகிய பகுதிகளில் அரசின் 144  தடை உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டோர் மீது இன்று (மார்ச் 25) 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இதுபோன்று 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண் குமார், எச்சரித்துள்ளார். ,,,

புனித ரமலான் வாழ்த்துக்கள்..