இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் (Bhagat Singh) நினைவு நாள் இன்று (மார்ச் 23, 1931).

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக செப்டம்பர் 28, 1907ல் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது. இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். இவரது சித்தப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர். தன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார். பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.

1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார். மார்ச் 1926ல் நவஜவான் பாரத சபாவை (இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார். ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார்.அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927ல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

பகத்சிங் அம்ரிட்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார். மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். செப்டம்பர் 1928ல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் அவர் உருவெடுத்தார்.

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார்.இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. பகத்சிங் மார்ச் 23, 1931ல் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..