Home செய்திகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்- அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்பு…

தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்- அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்பு…

by Askar

தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்- அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்பு..

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் இல்லை. நமது மாவட்ட பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை கடந்த ஜனவரி மாதம் முதல் 36 வெளிநாட்டுப் பயணிகள் நமது தொடர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 17 பேர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு முழுவதுமாக முடிந்து நோய் அறிகுறி ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர்கள் தொடர் கண்காணிப்பில் இன்று வரை இருந்து வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேரள தமிழக எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் சுகாதார ஆய்வாளர்கள் பிரத்தியேக மருத்துவர்கள் கொண்டு தொடர் கண்காணிப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதில் கேரளாவில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் அனைத்து பயணிகளும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே நமது மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. அந்த சோதனையில் யாரேனும் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்தால் தென்காசி தலைமை மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் அனுமதிக்க தகுந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பயணிகளுக்கும் கோரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதனை தடுக்கும் முறைகள் பற்றிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய முழு விழிப்புணர்வும், மேலும் அதனை தடுக்கும் முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் தாக்கம் ஏற்படாமல் அதனை தடுக்கும் முனைப்பில் முழு வீச்சில் தயாராக உள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிற துறைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் இன்றோடு சேர்த்து இதுவரை மூன்று முறை அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் எவ்வாறு இதனை தடுப்பது என்ற முறைகள் பற்றியும், பொதுமக்களுக்கு கை சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் சுவாச சுகாதாரத்தை எவ்வாறு பேணிக்காப்பது என்று முழு விழிப்புணர்வும் தெளிவாக கூறப்பட்டு துறையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் விதத்தில் செயல்பாட்டு முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு வைரஸ் பற்றியும் அதனை தடுக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அவரவர் தம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு இதனை தடுக்க வேண்டும் என்பது பற்றியும் செயல்பாட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணியோடு சேர்த்து அனைவரின் வீடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும், அதனை தடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முக்கியத்துவத்தையும் கைகழுவும் முறை பற்றியும் தினமும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு தினமும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகவும், தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்ட குழுக்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் இதன் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த காய்ச்சலை பற்றிய எந்தவிதமான அச்சமும் அடைய தேவையில்லை. கீழ்கண்டவற்றை தினமும் தவறாமல் கடைபிடித்தால் இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டோ அல்லது முழங்கையினாலோ மூடிக்கொள்ள வேண்டும். தினமும் சாப்பிடும் முன்பு, சமையல் செய்யும் முன்பு, கழிப்பறைகளை பயன்படுத்திய பின்பு முகத்தினை தொடும் முன் கைகளை சோப்பு போட்டு 30 முதல் 40 வினாடிகள் தேய்த்து கழுவ வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பு உடனடியாக கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கு முன்பு எந்தவொரு பொருளையோ நபரையோ தொடுதலை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகளில், அண்டை மாநிலங்களிலிருந்து வந்துள்ளவர்கள் 28 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும். சளி, இருமல், உடல் சோர்வு, மூச்சுத் திணறலுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். வெளிநாடுகளில் அல்லது அண்டை மாநிலங்களிலிருந்து வந்துள்ளவர்களுடன் நேர்முக தொடர்பை தவிர்க்கவும். மேலும் அவ்வாறு சந்தித்து இருந்தால் 28 நாட்களுக்கு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் பொது இடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் அந்த நபர்கள் பொது இடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு, அண்டை மாநிலங்களுக்கு, விழிப்பாட்டு ஸ்தலங்களுக்கு, சுற்றுலா ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

முக்கிய கவனத்திற்கு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவ அலுவலரின் பரிந்துரையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளல் போதுமானது. நமது கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டால் போதுமானது. பயன்படுத்திய கைக்குட்டை கிருமி நாசினி கொண்டு நன்கு துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் போது, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் முகமூடி அணிந்திருந்தால் போதுமானது. தென்காசி மாவட்டத்தில் இதுகுறித்து; சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரிடம் 9842461869 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங், கோட்டாட்சியர் பழனிக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகதநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (பொ) டாக்டர் வரதராஜன், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!