இஸ்லாமியரை தூண்டி விடாதீங்க.. உண்மையை பேசுங்க என்பிஆர் விவகாரத்தில் காரசார மோதல்..

இஸ்லாமியரை தூண்டி விடாதீங்க.. உண்மையை பேசுங்க என்பிஆர் விவகாரத்தில் காரசார மோதல்..

“என்பிஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன… என்ன பாதிப்பு இருக்கு சொல்லுங்க.. பாதிப்பை என்ன என்பதை குறிப்பிட்டு சொல்லாமல், அமைதி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை டெல்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம்… இன்னும் என்பிஆர் கணக்கெடுப்பே ஆரம்பிக்கப்படவில்லை.. சட்டசபைக்கு உள்ளே ஒன்று பேசி, வெளியே சென்று வேறு மாதிரியாக பேசி எதிர்க்கட்சிகள் பெரிதாக்க கூடாது.. மக்களிடம் உண்மையை எடுத்துசொல்ல வேண்டும்” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் காட்டமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

சிஏஏவுக்கு எதிராக தீர்மானத்தை சட்டபேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சமயத்தில்தான், என்பிஆர் சட்டத்தை அமல்படுத்துவதில் இஸ்லாமியர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம், குறிப்பிட்ட அந்த 3 கேள்விகள் இருக்காது.. இதை பற்றி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அத்துடன் மத்திய அரசுக்கு மாநில அரசு இதுசம்பந்தமாக கடிதமும் எழுதியிருந்தது. இதை நேற்று பேரவை கூட்டத்தில் திமுக தலைவர் பேசும்போது, மாநில அரசு எழுதிய கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் நேற்று மாலை செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது : கணக்கெடுப்பு “என்பிஆர் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன்… இதுவரை அரசு நோட்டிபிகேஷன் தரவில்லை.. அவர்கள் பதிலுரை வந்தப்பின் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கும்… இதுவரை மத்திய அரசும் பதிலளிக்கவில்லை. பதிலளித்தப்பின் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கும்… அதுவரை என்பிஆர் கணக்கெடுக்கும் பணி நிறுத்திவைக்கப்படுகிறது” என்றார்.

இந்த விவகாரம் இன்று மீண்டும் சட்டசபையில் எழுப்பப்பட்டது… முக ஸ்டாலினே இதை பற்றி பேச்சை ஆரம்பித்தார்.. “என்பிஆரை நிறுத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் ஏன் இந்த அரசு தயக்கம் காட்டுகிறது? என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக பேரவையில் அறிவிக்க வேண்டும்… இதற்காக தீர்மானத்தையும் நிறைவேற்றவேண்டும்.. என்பிஆர் நிறுத்தி வைக்கும் விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறி, அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அவை உரிமையை மீறிவிட்டார்” என்று குற்றஞ்சாட்டினார்.

உடனே இத்தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். அவர்களை, அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், “என்பிஆர் நிறுத்தி வைப்பு என்பது புதிய அறிவிப்பு இல்லை… ஏற்கனவே பேரவையில் சொன்னதைதான் செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தேன்… என்பிஆருக்கு ஆவணங்கள் தேவையில்லை என்ற உண்மை நிலையை தெரிவிக்கவே செய்தியாளர்களையும் சந்தித்தேன். இதில் எந்த உரிமை மீறலும் எதுவும் இல்லை.

போராட்டத்தை ஸ்டாலின் ஆதரித்து பேசியது பதற்றமான சூழலை உருவாக்குவது போல இருந்ததால் அந்த விளக்கம் அளித்தேன். .. மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியுமா என்பதை ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சொல்லட்டும்.. என்பிஆரில் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்பதை உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறிய அமைச்சர் உதயகுமார், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் பேரவையில் அறிவித்தார்!

இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, “ஏன் இப்படி என்பிஆர் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்? சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்… என்பிஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன.

எந்த இடத்தில் பாதிப்பு என்பதை குறிப்பிட்டு சொல்லாமல், அமைதி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை டெல்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம்… இன்னும் என்பிஆர் கணக்கெடுப்பே ஆரம்பிக்கப்படவில்லை.. சட்டசபைக்கு உள்ளே ஒன்று பேசி, வெளியே சென்று வேறு மாதிரியாக பேசி, எதிர்க்கட்சிகள் பெரிதாக்க கூடாது.. என்பிஆர் விவகாரத்தில் பதற்றமான சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கக்கூடாது.

குற்றம் சுமத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் பேசுகின்றனவே தவிர, உண்மையை பேசுவதில்லை… எல்லா கட்சி தலைவர்களும் இந்த விஷயத்தை உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.. சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்தைத்தான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பிலும் கூறியுள்ளார்” என்றார். இந்த காரசார விவாதத்தினால் அவையே சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..