வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன? உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம்..

வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேரை தாண்டி உள்ளது. சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் இத்தாலியில் சுமார் 16 கோடி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் எந்த அளவுக்கு கொரோனா தீவிரமாக உள்ளதை புரிந்து கொள்ளலாம்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அரசு உறுதி செய்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளரான இவர், ஓமனில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸை தடுக்க தற்போது ஒவ்வொருவரும் சுத்தமாக இருப்பதன் மூலமாக மட்டுமே தடுக்க முடியும் என்கிறார்கள் சுகாதார துறை அதிகாரிகள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவது, இருமல், தும்மலின்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்வது. போன்றவை முக்கியமானது ஆகும்.

இந்நிலையில் இந்திய மக்களிடையே கொரானா வைரஸ் பரவுவது குறித்து சில நம்பிக்கைகள் உள்ளது. அதாவது இந்தியா வெப்பமயமான நாடு. இங்கு கொரோனா வைரஸ் பரவாது அப்படியே பரவினாலும் பாதிக்காது என்று நம்புகிறார்கள். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ், “உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியம் ஆகும்.

வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்தோடு செயல்பட்டு, நோய்ப் பரவுவதற்கு வழிவகுத்துவிட வேண்டாம். மாறிவரும் தட்பவெப்பதுக்கு ஏற்ப கொரோனா எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்ளும் என்பது கணிப்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது” என்றார். எனவே மக்களே இப்ப வெயில் காலம் வந்திருச்சு அதனால் கொரோனா பரவாது என்றொல்லாம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..