திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்,தபால் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை,சாய்வு தள வசதி ஏற்படுத்திட TARATDAC வலியுறுத்தல்…

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தினசரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.குறிப்பாக திங்கள் கிழமைகளில் நடைபெறும் மனுநீதி நாளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பொதுமக்களில் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் அடக்கம். காலை முதல் மாலை வரை காத்திருந்து மனு அளிக்கும் மனுதார்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிக்க குடிநீரோ அல்லது கழிப்பறை வசதியோ செய்து தரப்படவில்லை.

கோடை காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் இதற்கான ஏற்ப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து செய்வதை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் அமரும் பகுதியை பூங்காவாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளித்திருப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது.கடந்த 24.07.2019 அன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மேற்கண்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி காலவரையற்ற முற்றுகை போராட்டத்தை நடத்திய போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம் 45 நாட்களுக்குள் மேற்கண்ட பணிகளை முடித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தது.வாக்குறுதி அளித்து ஏழு மாதங்கள் கடந்தும் பணிகளை நிறைவேற்ற மறுக்கும் மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அழகூட்டும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.

எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வசதியும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் வெஸ்டர்ன் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தி தருமாறு TARATDAC வலியுறுத்தியுள்ளது.மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் சாய்வுதளம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் அங்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி சாய்வுதளத்தின் இருபுறமும் கைப்பிடியும் அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தரவும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர்,S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..