மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடுக்கப்பட வேண்டியதும் கூட:- “மக்கள் நீதி மய்யம்” அறிக்கை.!

மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடுக்கப்பட வேண்டியதும் கூட:- “மக்கள் நீதி மய்யம்” அறிக்கை.!

2014ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை கடந்த 6ஆண்டுகளில் பால் விற்பனை விலையை சுமார் 28.00ரூபாய் வரை உயர்த்தி பொதுமக்கள் மீது கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்திய தனியார் பால் நிறுவனங்கள் 2020ம் ஆண்டின் துவக்கத்திலேயே லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 6.00ரூபாய் வரை உயர்த்தி கடும் அதிர்ச்சியளித்தன.

இந்நிலையில் பிப்ரவரி 21, 22ம் தேதி முதல் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ள செயல் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உடனடியாக இந்த விற்பனை விலை உயர்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டியதும் கூட.

ஒவ்வொரு முறையும் பால் விற்பனை விலை உயர்வுக்கு தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயர்வை காரணமாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது பால் தட்டுப்பாடு என்கிற புது காரணத்தையும் சேர்த்திருக்கின்றன.

பால் கொள்முதல் விலை உயர்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில் விவசாய பெருமக்களுக்கு உரிய விலை கிடைப்பதை நினைத்து பால் விற்பனை விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக கருதலாம். ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு சொற்ப அளவில் மட்டும் விலை கொடுத்து விட்டு, தங்களின் சுயலாபத்திற்காக அதனை பல மடங்காக ஆண்டுக்கு பலமுறை பொதுமக்கள் தலையில் விலை உயர்வாக சுமத்தி வருவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பல ஆண்டுகளாக இலக்கே இல்லாமல் செயல்படுவதும், அந்நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் ஊழல் பெருச்சாளிகள் சுரண்டி சாப்பிடுவதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதையும், துறை சார்ந்த அமைச்சர் அதற்கு உடந்தையாக இருப்பதையும் காண்கையில் மக்கள் சொத்துக்களை சுரண்டுவோர் மீது சட்டத்தின் கைகள் நெருங்கிட மறுப்பது வியப்பளிக்கிறது.

எனவே தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி பால் விற்பனை விலையை கட்டுப்படுத்தவும், பால் தட்டுப்பாட்டை சரி செய்ய பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான அனுமதியை ரத்து செய்வதோடு, ஏற்றுமதி செய்திட முற்றிலுமாக தடை விதிக்கவும், பால் தட்டுப்பாட்டை சரி செய்திட தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து போர்க்கால அடிப்படையில் செயல்படுவது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

பால் தட்டுப்பாட்டை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வெங்காயத்திற்கு ஏற்பட்ட நிலை தான் பாலுக்கும் ஏற்பட்டு குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகுவதற்கு முன் பேருந்து, ஆட்டோவிற்கான அதிகபட்ச அளவு கட்டணங்களையும், விவசாய பொருட்களான நெல், கரும்பு போன்றவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் அரசே நிர்ணயம் செய்வது போல ஒட்டுமொத்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் போது ஆட்சியாளர்கள் அதற்கான விலையை மக்கள் மன்றத்தில் கொடுத்தே தீர வேண்டும். அப்போது மக்கள் நீதியே வெல்லும்.

சு.ஆ.பொன்னுசாமி (மாநில செயலாளர்) “மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர்கள் அணி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..