ISO தரச்சான்றிதழ் ஆரம்பிக்கபட்ட நாள் (பிப்ரவரி 23, 1947)

பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே பொருள் அளவிலும், தரத்திலும், சொல்லப்போனால் அதன் பெயரிலும் கூட வெவ்வேறாக இருப்பதால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்கியது. உதாரணமாக, பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பற்சக்கரங்கள் (Gear) வெவ்வேறு பெயர்கள் மற்றும் அளவீட்டு அலகுகள் (units) கொண்டதாக இருந்ததால், ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரத்தை மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது அங்குள்ள பற்சக்கரத்தோடு இணைக்க முடியவில்லை.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, உலகம் முழுமைக்குமான பொதுவான நியமத்தை (standards) உருவாக்குவதற்கான தேவை உருவாகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் சுவிட்சர்லாந்து – ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ISO – சர்வதேச தரநியம நிறுவனம் (International Organization for Standardization). இந்நிறுவனத்தை 1947-ம் ஆண்டில் – முதன் முதலாக காட் (GATT) ஒப்பந்தம் போடப்பட்ட அதே ஆண்டில் – 25 நாடுகளின் பிரதிநிதிகள் குழு உருவாக்கியது.

ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும்.சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.ஒரு தொழிற்சாலை, ஒரு நாடு என்று ஆரம்பத்தில் இருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி – செயல்பாடு இன்று வல்லரசு நாடுகளின் கால கட்டத்தில் உலகளாவிய முறையில் பரவியிருக்கிறது. உற்பத்தி உலகமயமான பிறகு அதை ஒரே மாதிரி தரப்படுத்துவதன் தேவை எழுகிறது. இல்லையெனில் நுகர்வோர் வாங்கும் பொருள் ஒரே தரத்திலானதாக இருக்காது.

சந்தையில் விளம்பரம் செய்யும் போது இந்த ஆப்பிள் ஃபோன் சீனாவில் தயாராகி அமெரிக்காவில் விற்பனையாகிறது என்று செய்ய மாட்டார்கள். மாறாக அதன் தரத்தை மட்டுமே பகிர்வார்கள். உலகமய காலகட்டத்தில் வல்லரசு நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது பொருளியல் உற்பத்தி தரமானதாக இருக்கிறது என்று காட்டுவதற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் உதவுகிறது.

மேலும் பொறியியல், மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, கனிமவளம், கணினி மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான முறைகள் – அளவுகளை பின்பற்ற வேண்டிய தேவையும் இருக்கிறது. அதே போன்று நிதி, வங்கி, பங்குச் சந்தை போன்றவற்றிலும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாட்டு முறைகளை பின்பற்ற தேவை இருக்கிறது.

ISO (ISO) என்பது உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தர மேலாண்மை முறைமையாகும் (Quality Management System). முதன் முதலாக தர மேலாண்மை முறைமை, இரண்டாம் உலகப்போர் கால இங்கிலாந்தில்தான் உருவானது. அங்கு ஆயுத உற்பத்தியகங்களிலேயே வெடிகுண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன, போர்க்களத்திற்குச் சென்ற குண்டுகள் சில வெடிக்காமல் போயின. இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு தர மேலாண்மை செயல்முறையை (BSD 5750) வகுத்தளித்தது. அதன்படி ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பிற்கான செயல்முறைகளை வகுத்து ஆவணப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அச்செயல்முறைகளை முறையாக பின்பற்றி உற்பத்தி செய்வதை இடையிடையே ஆய்வுசெய்வதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக இந்த மொத்த நடைமுறையையும் ஒரு அரசு ஆய்வாளர் பரிசோதித்து உறுதியளிக்க வேண்டும். இதன் மூலம் குண்டுகள் தொழிலகத்திலேயே வெடிப்பது தடுக்கப்பட்டது.

ISO தர மேலாண்மை முறைமையென்பது ஒரு நிறுவனத்தின் தரக் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கான உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருவருக்குமான பாத்திரம் மற்றும் பொறுப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது இன்னின்ன பொருள், இன்னின்ன தரத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நியமங்களை (standards) நிர்ணயம் செய்வதில்லை. மாறாக, அந்தக் குறிப்பிட்ட உற்பத்தித்துறையில் பின்பற்ற வேண்டிய மொத்த நடைமுறைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு.

இந்நிறுவனம் எந்த தரச்சான்றிதழையும் வழங்குவதில்லை. ஒவ்வொரு தொழில் மற்றும் சேவைத்துறைக்குமான பொதுவான வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறைகளையே வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் தனியார் நிறுவனங்களே (Certification Bodies) தரச்சான்றிதழை வழங்குகின்றன. Bureau Veritas, Tuv Nord, BSI, TuvSud போன்றவை இந்தியாவில் சான்றளிக்கும் நிறுவனங்களில் சில.

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை ISO சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன் உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருக்குமான பத்திரம், பொறுப்புகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் (Check Lists) போன்றவற்றை முறையாக வகுத்து ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் நிறுவனம் தனது முதல் தணிக்கையில் (First Audit) இவற்றை ஆய்வு செய்து அங்கீகரிக்கும். அதாவது, ஒவ்வொரு தொழிற்சாலையும் தனக்கான தனிப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகளை (process and procedures) வகுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சென்னையில் இயங்கும் ஃபோர்ட், ஹுண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான் போன்ற கார் கம்பெனிகள் தனக்கான தனித் தனியான செயல்முறைகள், நடைமுறைகளை வகுத்துக் கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ISO உட்குழுவைக் கொண்டு உள் தணிக்கை செய்துகொள்ள வேண்டும். சான்றளிக்கும் நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கை செய்து ISO சான்றிதழை உறுதிப்படுத்தும். சில இரண்டாந்தர சான்றளிக்கும் நிறுவனங்கள் வெறுமனே காசு வாங்கிக்கொண்டு எந்த தணிக்கையும் செய்யாமல் சான்றிதழ்களை வழங்குவதும் இருக்கிறது.

ISO தர மேலாண்மை முறைமையில் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையையும் ஆவணப்படுத்த வேண்டிய நடைமுறைகள் மிகமிக சலிப்பூட்டக் கூடியதாகும். உற்பத்தி பொருளுடைய அல்லது சேவையின் தரத்தையும், விவர வரையறையையும் (specification) அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் இருக்க கூடிய தர உத்திரவாதத்துறை (QA) தான் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அதாவது, ISO சான்றிதழ் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறதே அன்றி உற்பத்திப் பொருளின் தரத்திற்கு சான்றளிக்கப்படுவதில்லை.

முதலாளித்துவம் இருக்கும் வரை எதிலும் “தரம்” பார்ப்பது கடினம். சோசலிச உற்பத்தியில்தான் அனைத்தும் தழுவிய தரத்தை அடைய முடியும். ஒரு பொருள் வாங்கும் போது அதன் தரம் மிகவும் முக்கியம். எல்லா பொருள்களையும் தரத்தை (ISO) சரிபார்த்து வாங்குவோம்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..