
நெல்லையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சாந்திநகரில் உள்ள எச்.டி.எஃப்.சி. ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இருவர் இன்று அதிகாலை ஹெல்மெட், முகமூடி அணிந்து கொண்டு ஏடிஎம் மையம் அருகே நின்று கொண்டு நோட்டமிட்டுள்ளனர்.
ஆட்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து எச்சரிக்கை அலாரத்தின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
பின்பு இரும்புக்கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை கருவி மூலம் மும்பையிலுள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கிடைக்க, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட பாளையங்கோட்டை போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை ஏடிஎம் மையத்திலேயே வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் வண்ணார்பேட்டை பாலாஜி தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது24). இவர் நெல்லையில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் முத்து (23), டிரைவர் ஆகிய இருவர் எனவும்,இருவரும் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்களை கைது செய்த போலீசார் இருவரையும் பாளை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்