குடியுரிமையைப் பறித்துவிட்டு உங்களுக்கு சலுகைகள் தருகிறேன் என்று சொல்வது தகரத்திற்கு தங்க முலாம் பூசுவது போன்றதாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…

தமிழகம் முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய கருப்புச் சட்டங்களைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்றைக்கு சட்டப்பேரவையில் பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார்.

ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் 15 கோடியில் தங்கும் விடுதி, உலமாக்களின் ஓய்வூதியம் ரூபாய் 1,500 லிருந்து ரூ 3,000 ஆக உயர்த்தப்படும், உலமாக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியங்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் C.A.A, குறித்து பேசும் போது கடுமையான முறையில் நடந்து கொண்ட முதலமைச்சர், இன்றைக்கு இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தும் வகையில் இத்தனை சலுகைகளையும் அறிவித்துள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. நேற்று சட்டசபையில் மிகவும் ஆவேசமாக, C.A.A., சட்டத்தால் தமிழகத்தில் பாதிப்படைந்த ஒரு சிறுபான்மையினரை காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர்.

விஷச்செடியின் விதையை விதைத்து விட்டு, இந்த செடி மூலம் பாதிப்படைந்தவர்கள் காட்ட முடியுமா? என்று அப்போதே கேட்பதைப் போல இருக்கின்றது முதலமைச்சரின் கேள்வி. விஷச்செடி இப்போதுதான் விதைக்கப்பட்டுள்ளது., அது வளர்ந்த பிறகுதான் அதனுடைய பாதிப்புகள் தெரியவரும் என்பதைக்கூட முதலமைச்சர் உணராமல் இருக்கின்றாரா?

நேற்றைய ஆவேச குரலுக்கு ஆசுவாசப்படுத்தும் வகையிலேயே இஸ்லாமியர்களை குளிர்விக்கும் வகையில் இன்றைக்கு சில சலுகைகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். குடியுரிமையைப் பறித்துவிட்டு உங்களுக்கு சலுகைகள் தருகிறேன் என்று சொல்வது தகரத்திற்கு தங்க முலாம் பூசுவது போன்றதாகும். குடியுரிமையைப் பறித்து விட்டு அகதிகள் முகாம்களில் அடைத்து விட்டு, உங்களுக்கு ஹஜ் கட்டடம் அமைத்து தருகிறேன், ஓய்வூதியத்தை உயர்த்துகிறேன், மோட்டார் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று சொல்வது பிணத்துக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒப்பானதாகும். இப்போது நாங்கள் வாழ்வதற்கு உரிமை கேட்கிறோமே தவிர, சலுகைகளைக் கேட்கவில்லை என்பதை முதல்வர் தெளிவாக உணர வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் யாரையும் பாதிக்காது என்று சொல்லி விட்டு இஸ்லாமியர்களுக்கு சலுகைகள் தருகின்றேன் என்று சொல்வது, உங்களுடைய கால்களை வெட்டிவிட்டு உங்களுக்கு செருப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்வதைப் போன்றது. அதுபோலவே இன்றைய தமிழக முதலமைச்சரின் அறிவிப்புகள் அமைந்துள்ளது.

இன்றைக்கு இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் நின்று போராடுவது உங்களின் சலுகைகளைப் பெறுவதற்காக அல்ல! மாறாக தங்களின் குடியுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக! எனவே இதுபோன்ற சலுகை அறிவிப்புகள் இஸ்லாமியர்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு தேவை எங்களின் குடியுரிமைப் பாதுகாப்பு மட்டுமே!

சி.ஏ.ஏ.., க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் போன்ற கொடூரங்களை தமிழகத்தில் அமல்படுத்த படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவித்தால் மட்டுமே இஸ்லாமியர்கள் மனம் குளிர்வார்கள் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.

இப்படிக்கு, இ.முஹம்மது, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..