தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 19, 1855)

தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், பிப்ரவரி 19, 1855ல் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா.இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.அரிய நூல்களாகிய சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவற்றின் ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டறிந்து அவற்றையும் முழுமையாக கற்றுத்தேர்ந்தார். இந்த ஓலைச் சுவடிகள் பெரும்பாலும் பல்வேறு பகுதிகளாக வெவ்வேறு நபர்களிடம் இருந்தன. அவற்றை ஒன்று திரட்டி சேர்ப்பது பெரும் பணியாக இருந்தது. இவற்றின் அருமை பெருமைகளை அறியாத பலர் அவற்றை அடுப்பு எரிக்க பயன்படுத்தினர்.இதற்காக ஓலைச் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பலரிடமும் உதவி வேண்டினார். செல்வந்தர்கள் பலரை தயங்காமல் மீண்டும் மீண்டும் சந்தித்து தமது வேண்டுகோளை முன்வைத்தார். ஓரளவு பொருள் உதவி கிடைத்தது. அதைக்கொண்டு முதல் நூலாக சீவகசிந்தாமணியை வெளியிட முயன்றார் .பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாத ஐயரும் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகிற்கு அறியச் செய்தவர். உ.வே.சா 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.இந்திய அரசு பிப்ரவரி 18, 2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஓய்வில்லாமல் உழைத்த உ.வே.சா ஏப்ரல் 28, 1942ல் இவுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..