இராமநாதபுரம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க : தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் இன்றிரவு (14/02/2020, வெள்ளி) நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் , தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில்  இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன பொதுக்கூட்டம் இன்று இரவு (14/02/2020)  நடந்தது.

இராமநாதபுரம் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முஹமது பஷீர் தலைமை வகித்தரர் . இராமநாதபுரம் மாவட்டச் செயலர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான் அலி , மாவட்ட துணை செயலர்கள் யாசர் அரபாத் , மன்சூர் அலி , சுல்தான் , சகுபான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அநீதிக்கு எதிராக அணி திரள்வோம் என்ற தலைப்பில்  மாவட்டத் துணை செயலாளர் மன்சூர் அலி, எங்கள் நாடு எங்கள் உரிமை என்ற தலைப்பில்  மாநிலச் செயலர் நெல்லை பைசல், அடக்குமுறைக்கு அஞ்சோம் என்ற தலைப்பில்  மாநிலப் பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா  ஆகியோர் பேசினார் . மாவட்டச் செயலாளர் ஆரிப்கான் நன்றி கூறினார் .

பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்டத் துணைச் செயலாளர் சகுபான் அலி வாசித்தார் . குடியுரிமை திருத்த சட்டததை மத்திய அரசு  உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கேரளா, மேற்கு வங்கம் , பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாநில மக்களின் குடியுரிமை காத்த புதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கு இக்கண்டனப் பொது கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அறவழியில் போராடிய டெல்லி ஜாமி ஆ பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சங் பரிவார அமைப்பை இந்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழகத்திலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வன்முறையாக பேசிவரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..