அன்பை பரிமாறும் தினம் பிப்ரவரி – 14 உலக காதலர் தினம் (World Valentine’s Day)

ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்துவைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி. 269ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 14 என்றலே, யுவன், யுவதிகளின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத்தொடங்கிவிடும். காதலிப்பவர்கள், காதலிக்க தூதுவிட்டுக் கொண்டிருப்பவர்கள், ஒருதலையாகக் காதலிப்பவர்கள் என எல்லோருக்குமே அந்த நாள் குதூகலத்தைக் கொடுத்துவிடும். கரடி பொம்மை, சாக்லெட், பூங்கொத்து, வாழ்த்து அட்டை எனத் காதலர்கள் தங்களுக்குள் வித்தியாசமான ஆச்சரியப் பரிசுகளையும் மனத்தையும் பரிமாறிக்கொள்வார்கள்.

காதலர் தினம் என்றால், நம்மூரில் கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஏதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு விடுப்பு எடுத்துக் கொள்வோர் உண்டு. ஆனால், டென்மார்க்கில் இப்படிப் பொய் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், அங்கு 1990-ம் ஆண்டு முதலே காதலர் தினத்துக்குத் தேசிய விடுமுறை அறிவிக்கப் படுகிறது. அன்றைய தினம் காதலன் ‘டேனிஷ் ட்விஸ்ட்’ என்ற பிரபலமான ரொட்டியைத் தன்னுடைய காதலிக்கு பரிசாக வழங்குவார். உலகின் காதல் நகரம் என்ற சிறப்பைப் பெற்றது பிரான்ஸ். இந்நாட்டில்தான் முதன் முதலில் காதலர் தின வாழ்த்து அட்டை வெளியானதாகக் கருதப்படுகிறது. இந்த மொபைல் யுகத்திலும் அங்கே காதலர் தின வாழ்த்து அட்டைகள் வழங்குவது பிரபலமாகவே உள்ளது.

பொதுவாக காதலர் தினத்தைக் காதலிப்பவர்கள் சேர்ந்து அன்றைய தினத்தில் கொண்டாடுவார்கள். ஆனால், தென்கொரியாவில் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கும் காதலர் தினக் கொண்டாட்டம் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கிறது. முதலில் கொண்டாடப்படும் காதலர் தினத்தென்று பெண்கள் ஆண்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து மகிழ்வார்கள். அதேபோல் ‘வெள்ளை நாள்’ என்றழைக்கப்படும் மார்ச் 14 அன்று ஆண்கள் தங்களுடைய காதலிக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.அதேபோல் சீனர்கள் தங்களுடைய சீன நாட்காட்டியின் அடிப்படையில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள இளவரசரின் மகளான ஸின்யூ பூமியில் வசித்த ஏழையான நைவ்லங்கைத் திருமணம் செய்துகொள்கிறார். இதைக் கேள்விபட்ட சொர்க்க இளவரசர் ஷின்னு மகளைத் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார்.

இங்கிலாந்துப் பெண்கள் காதலர் தினத்ததென்று தலையணைக்கு அடியில் பிரியாணி இலையை வைத்துக்கொண்டு உறங்குவார்கள். தலையணையின் நான்கு முனைகள், நடுப்பகுதியில் பிரியாணி இலையை வைத்து உறங்கினால் கனவில் எதிர்காலக் கணவர் வருவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதேபோல் வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர் இத்தாலிப் பெண்கள்.

அவர்கள் காதலர் தினத்தின்போது விடியற்காலை எழுந்து, அவர்கள் சந்திக்கும் முதல் ஆண் அவர்களின் கணவராக வருவார் என நம்புகிறார்கள். இவர்களைப் போல் தென் ஆப்பிரிக்கா பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆணின் பெயரை காதலர் தினத்தின்போது உடையில் எழுதிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு காதலர் தினத்தில் ஜகமே காதலால் நிரம்பியுள்ளது. இந்த மாசற்ற அன்பே மனிதத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்கிறது.

தகவல்: இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..