Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் முறையாக நடைபெறாததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு TARADAC சார்பில் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் முறையாக நடைபெறாததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு TARADAC சார்பில் போராட்டம்

by mohan

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் சார் ஆட்சியர் தலைமையில் மாதம் ஒரு முறையும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்றும் மனு பெறப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக மனு ஏற்பு அல்லது நிராகரிப்பு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும், என்றும் ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சார் ஆட்சியரும் மாவட்ட ஆட்சியரும் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகளை உத்தரவாக வெளியிட்டார்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும் போது, வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவானது உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒருமுறை கூட முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் பெறுகின்ற முகாமாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முகாமாக மாறவில்லை. குறிப்பிட்ட சில துறைகளின் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் கூட்டமாக இருக்கிறது. பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதே இல்லை. அது மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும் எந்த மனுவிற்கும் ஏற்பு அல்லது நிராகரிப்பு போன்ற விபரங்களை அளிப்பதில்லை, ஆய்வுக்கூட்டங்களை நடத்துவதில்லை. இதற்கெல்லாம் மேலாக மாவட்ட ஆட்சியர் உரிய நேரத்தில் வருவதே இல்லை. இதுபோன்ற குறைகள் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சரியாக காலை 10.00 மணிக்கே வருகை தந்தபோதும் மாவட்ட ஆட்சியர் 12.30 மணிக்கே வருகை தந்தார்.மாற்றுத்திறனாளிகள் கேட்கும் உதவிகளுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாமல் உதவித்தொகை கேட்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும், வெள்ளை பேப்பரில் நீங்களே எழுதி வாருங்கள் என்றும், VAO விடம் கையெழுத்து பெற்று வாருங்கள் என்றும் கூறி மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்தார்கள், அதுமட்டுமின்றி கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான நிலையையும் ஆய்வு செய்யவில்லை.

இப்படியாக வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே இக்கூட்டம் நடத்தப்படுவதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வலியுறுத்தியும், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்காததை கண்டித்தும் 11.02.2020 அன்று காலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி, ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையின் முடிவில் இனிவரும் காலங்களில் முறையாக கூட்டம் நடத்துவதாகவும் அனைத்து மனுக்களுக்கும் முறையாக பதில் அளிப்பதாகவும் கூறியதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!