இராமநாதபுரம் அருகே இறந்தவர் உடலை எடுத்து வந்து அடக்கம் செய்ய பாதையின்றி அவதி

இராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் ஊராட்சியில் முனியன் வலசை, குப்பன்வலசை, சாத்தான்குளம், கற்பூரவலசை, அம்பேத்கர் நகர், சங்கந்தியான்வலசை உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இரண்டாயிரத்திற்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள கிராம மக்களுக்கு குளம், சுடுகாடு ஆகியன ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயில் முளைப்பாரி விழாவின்போது பாரி கரைக்க ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரவேண்டியுள்ளது. இந்நிலையில், முனியன் வலசையை சேர்ந்த குப்பம்மாள் உடல் நலக்குறைவால் நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது உடலை, அவரது உறவினர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து எடுத்து வந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே அடக்கம் செய்வதனர். இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் கூறுகையில், எங்கள் பகுதி மக்களின் இத்தகைய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ரயில் கேட் அமைத்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மண்டபம் ஒன்றிய திமுக., இளைஞரணி துணை செயலாளர் வினோத்குமார் கூறியதாவது:

முன்பொரு காலத்தில் ரெகுநாதபுரம் பிரதான சாலையாக இருந்தது. தற்போது ரயில் தண்டவாளத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் சுரங்கப்பாதை மூழ்கும் நிலை உள்ளது. இக்கால கட்டத்தில் சாத்தான்குளம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உயிரிழப்போரின் உடல்களை எடுத்து வர ரயில் தண்டவாளம் பெரிதும் இடையூறாக உள்ளது. இந்த நீண்ட கால கோரிக்கை தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே இணை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். சாதகமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார். இதனை தொடர்ந்து திமுக தொமுச மாவட்ட தலைவர் மலைக் கண்ணு பலமுறை முயன்றும் எவ்வித நடவடிக்கை இன்றி கிடப்பில் போனது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் 2007 ஆக.12 ல் அகல ரயில் போக்குவரத்து தொடங்கிய போது சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பிறகு, இடையூறு மேலும் அதிகரித்துள்ளது. இக்கோரிக்கை மறைந்த முன்னாள் எம்பி ரித்திஷ், முன்னாள் எம்பி அன்வர்ராஜாவிடமும் முறையிடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் சிரமம் போக்க ரயில் கேட் அமைப்பது ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும். தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பாலங்கள் மற்றும் பொறியியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..