Home செய்திகள் 1368 கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன் எனும் ஃபீனிக்ஸ் மனிதன் பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 11)

1368 கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன் எனும் ஃபீனிக்ஸ் மனிதன் பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 11)

by mohan

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சிதம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந் தார்.நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன்.

ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே ‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது பள்ளி. எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு கல்வி புகட்டினார். எடிசனும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார். பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “இது ஏன் இப்படி?”, “அது ஏன் அப்படி?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு.

சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.

பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத் தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி, இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார்.அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். தனது வீட்டின் கீழ்த்தளத்தில் தட்டு முட்டுப் பொருட்களுக்கு இடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்கு தேவைப்படும் வேதிப்பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார். ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்பு பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்றார்.

ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு பிற்காலத்தில் அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபராக அவரை உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார்.அக்காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய தொழில்நுட்பமாகத் தந்தி என்றழைக்கபடும் டெலிகிராப் விளங்கியது. மோர்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்தார். சிறுவன் எடிசனுக்கு இந்த தந்தி தொழில் நுட்பம் பெரும் ஆர்வத்தை தந்தது.

ரயில் நிலைய தந்தி அதிகாரி மூலம் தந்தி முறையை கற்று அந்த தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களைச் செய்தார். பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்’ என்ற கருவியை கண்டு பிடித்தார். எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு ஆறு மதத்திற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தார்.

இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம், நான் மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். இது ஒரு உலக சாதனை.

எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் (முப்பது நொடிகள்) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு. விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.

ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். ஆமாம் எடிசன் நீங்கள் வெற்றியாளன் தான். தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று.தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.அன்பு மாணவர்களே! எடிசன் உங்களுக்காக விட்டுச்சென்றுள்ள வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி

செய்தி:.இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!