CAA, NRC, NPR, ஜனநாயகத்திற்கு புறம்பானது:-பிப்ரவரி 2 முதல் 8 வரை வீடு வீடாக சென்று ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும்.மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும் தன்னுடைய மதவெறி அடிப்படைச் சித்தாந்தத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக – மத அடிப்படையில் – நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019 (CAA), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை ஜனநாயகத்திற்குப் புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும்  நெருக்கடியை ஏற்படுத்தி, மாணவர்களையும் மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி, நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து தேசத்தின் கவனத்தைத்  திசை திருப்பி, தனது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க. அரசின் இத்தகைய தேச விரோதச் செயல்களைக் கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 24 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தோழமைக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. கழகத்தின் நிர்வாகிகள் அதனை உணர்ந்து, மாவட்டந்தோறும் கையெழுத்து இயக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். நம்முடைய மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சிப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், தோழமைக் கட்சி நிர்வாகிகளையும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிடச் செய்ய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்படும், கையெழுத்து இயக்கத்திற்கான படிவம் குறித்த விளக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது எப்படி என்பதை அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் விளையக்கூடிய அபாயங்களையும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக அவை இருப்பதையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைப்பதையும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் போல விளக்கிட வேண்டும். நீங்கள் சந்திக்கப் போகும் மக்கள் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்துகொண்டு, மனதார கையெழுத்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். இது போலிக் கணக்குக் காட்டும் ‘மிஸ்டு கால்’ இயக்கமல்ல. மக்கள் தங்கள் உள்ளத்து உண்மை உணர்வை கையெழுத்தாக வெளிப்படுத்துகின்ற இயக்கம்.தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தினைப் பெறுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. பிப்ரவரி 2 முதல் 8 வரை இந்தப் பயணம் வீடு வீடாகத் தொடர்ந்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

புனித ரமலான் வாழ்த்துக்கள்..