தஞ்சையில் நம் தமிழ் மாமன்னன் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்கு.. எம்மொழியில் குடமுழுக்கு..?

ஏனைய எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பாரம்பரிய, கலாச்சார, பண்பாட்டு, மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட, தமிழ் உணர்வு கொண்ட எவரும் சாதாரணமாக கடந்து செல்ல இயலாத நிகழ்வு ஒன்று பேசப்படுகிறது என்றால்..

ஆம் தஞ்சையில் நம் தமிழ் மாமன்னன் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்கு.. எம்மொழியில் குடமுழுக்கு..?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி.. இன்னமும் இளமையாயிருக்கிற செம்மொழியான தமிழ் மொழியா..?

இறைமொழி என்ற போற்றுதலுடன் வழக்கொழிந்த வடமொழியா..?

இருமொழிகளுக்கும் ஆதரவாக சில பல கருத்துக்கள் ஆவேசமாக உலவவிடப்பட்டு வரும் இவ்வேளையில்..

பெருங்கோ இராசராசன் இருந்தால் எதை விரும்புவான்..?

சிவனே தலையே அருளே என லிங்க ரூபனை அமர வைத்த சாதனையை சமஸ்கிருதத்தில் சாதித்ததாக எங்கேயும் குறிப்பில்லையே.

ஆகம விதி மீறல் என்றால்..

தஞ்சை பெரிய கோயிலே ஆகம மீறலாகத் தான் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் பெரியதாகவும் கருவறை விமானம் சிறியதாகவும் கட்டப்பட வேண்டிய தமிழகத்து கோயில்கள் விதிமுறையினை தகர்த்து, விமானம் வானளாவ.. தட்சிண கயிலாயமென்றே கட்டி வைத்தானே நம்மவன்.. இராசராச பெருங்கோ.

ஆலயம் எழுப்பப்பட்ட காலத்தில் அத்தனை பெரிய ஆலயத்தை எழுப்பும் விதமான மாதிரிகள் எதுவுமில்லாமல் திட்ட வரைவுகள் ஏற்படுத்த ஒவ்வொரு நிலையிலும் எத்தகைய செய்முறை உருவாக்க சிக்கல்களை, நடைமுறையில் நாளுக்கு நாள் அனுபவித்திருப்பார்கள் என்று கொஞ்சம் மனதூன்றி சிந்தித்தாலே புரிந்து விடும்.

எப்படி கட்டி முடிப்பதென்று சிற்பிகளும் மற்றவர்களும் பிரமித்து, பெருங்கோ இராசராசன் மூலமாக இறையே அமைத்துக் கொண்டு அமரும் பெருங்கோவில் என்று தானே வரலாறு அறியப்படுகிறது.

எங்கேயும் காணமுடியாத மிகப் பெரிய அளவில் கோவிலும் ஆவுடையாரும் நந்தியும் இறைவன் பெரியவன் என காலங்காலமாக யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் வானளாவ கட்டிய சாதனை அல்லவா.. (விதி மீறல் எனில் இருந்து விட்டுப் போகட்டும்..)

ஆக.. தஞ்சை பெரிய கோயில் என்பதே மறுக்கமுடியாத சாதனை முயற்சி தான்.

மன்னனாக இருந்தும், அதிகாரங்கள் நிறைந்திருந்தும், மொழியின் பால் கொண்ட துவேச உணர்வால் செல்லரிக்க விடப்பட்ட தேவாரத் திருமுறைகளை சிதம்பரம் ஆலயத்திலிருந்து எத்தகைய போராட்டத்தின் இறுதியில் மீட்டெடுத்தான் நம் பெருங்கோ.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நின்று சிறக்கும் தஞ்சை பெருவுடையார் அமர ஆசைப் பட்டது மூவரின் திருமறைகளின் பேரழகால்..,

அமைந்தது தமிழால்.. ஆக்கப்பட்டது தமிழால்.. பாடப்பட்டது தமிழால்..

தெய்வத்திற்கு எல்லா மொழிகளும் தெரியும்.. தெய்வம் நெ(ம)கிழ்ந்து தலையசைத்து ரசிக்கும்.. பக்தனுக்கும், பாமரனுக்கும் தெரிந்த மொழியில் குடமுழுக்காற்றுங்களேன்..

தமிழில் குடமுழுக்கு செய்தால் இறை ஆற்றல் உயிர்ப்பு பெறாது எனில்..

குறளுக்கு சங்கப் பலகை எழுந்து வந்ததே பொய்யாகி விடுமே..

தமிழால் இறைவனையே கட்டிவைத்த புலவர்கள் யாவரையும்.. கட்டு கட்டான தமிழ்ச் சுவடிகளையும்.. தெய்வப்புலன் கண்ட திருத்தலங்களையும் விட்டொழித்து விடுவோமா..?

தஞ்சையின் வரலாற்றில் பிரிக்கமுடியாத கரூர் சித்தர் எழுதிய நானூற்றிற்கும் மேலான நூல்கள் வடமொழி அல்லவே.

திருமுறைகளின் காவலன் கட்டிய கோயிலுக்கு அமுதத்தமிழ் தெய்வத்தமிழ் மொழியில் குடமுழுக்கு செய்வதே சாலப் பொருந்தும்.

செந்தாமரைக்கொடி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..