நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்.!

 நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்.!

துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார்.

நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள் புகார்களை அளித்தார்கள்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தான் பேசியது நடந்த சம்பவம் தான் என்றும் அதற்கு பத்திரிக்கை ஆதாரங்கள் உள்ளது என்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்தார்கள்.

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆதாரமாக காட்டிய அவுட்லுக் இதழில் அப்படி ஏதும் செய்திகள் நாங்கள் வெளியிடவில்லை என்று அவுட்லுக் இதழின் பொறுப்பாளர் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்துள்ளார்

கழகத்தின் சார்பில் காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்கு 21.01.2020 அன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கழகத்தின் சார்பில் உயர்நீதி மன்ற வழக்குரைஞர் கழகத் தோழர் அருண் அவர்கள் வாதங்களை முன் வைத்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிபதி ராஜமாணிக்கம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.!

“தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் மிக முக்கியமானவை, பெரியார் மிகப்பெரிய தலைவர் அவர் கொள்கைகளை மறுக்க முடியாது, பெரியார் சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமூகநீதிக்காக போராடியவர், மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர், ஒட்டுமொத்த மக்களின் உயர்வுக்கு பாடுபட்டவர், அப்படியான தலைவர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கோடு யார் பேசினாலும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதி அவர்கள், மேலும், நடப்பதே திராவிட இயக்க ஆட்சிதான் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நீதிபதி ராஜமாணிக்கம் அவர்கள் தெரிவித்தார். அரசுத்தரப்பும் கணம் நீதிபதி அவர்களின் கருத்தையே வலியுறுத்தியது. வழக்கு விசாரணையின்போது வழக்கின் எதிர் மனுதாரரான தமிழக அரசின் காவல் துறையின் சார்பில், புகார் மனு அளித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் காவல்துறைக்கு புகார் மீதான நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் காவல்துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் புகார் அளித்த நாளில் இருந்து 15 நாட்களாவது ஆனபின்பு காவல்துறை இந்த புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை வழங்கவில்லை என்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிட்டு தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற அனுமதியளித்தார்.

நீதிமன்ற நடைமுறையின் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்கு பிறகு கழகத்தின் புகார் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்கின்ற நீதியரசரின் உத்தரவை ஒட்டியும் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற அனுமதியளித்தததின் காரணமாகவும் வழக்கு தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசத்திற்குள் ரஜினிகாந்த் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் அப்படி எடுக்கத் தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் படி இன்னும் ஒரு வாரம் கழித்து திராவிடர் விடுதலைக் கழகம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்.

தந்தை பெரியார் அவர்களின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் மீது சட்ட நடவடிக்கை பாயும் வரை நமது சட்டப் போராட்டம் தொடரும்.

திராவிடர்விடுதலைக் கழக தலைமையகம்

24.01.2020.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..