ஜன. 12-தேசிய இளைஞர் தினம்: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்..

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினம் என்று அரசு அறிவித்தது. இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக பெரிதும் முயற்சித்தவர் விவேகானந்தர். அவர் தன்னிடம் 100 இளைஞர்களை அனுப்பினால், அவர்கள் மூலம் நாட்டை வலிமையான இந்தியாவாக மாற்றுவதாகக் கூறினார். அந்த அளவுக்கு இளைஞர்கள் மீது அவர் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். இளைஞர்களால்தான் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்று அவர் நம்பினார்.

அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் “சகோதர, சகோதரிகளே!’ என்று அவர் தன்னுடைய பேச்சைத் தொடங்கியபோது, பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். சுவாமி விவேகானந்தர் சிறு வயதிலேயே இந்து சமயக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும், பகுத்தறிவு பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராகவும் காணப்பட்டார்.

 விவேகானந்தருக்குக் கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துகள் இருந்தன. கல்வியை எப்படி வழங்க வேண்டும் என்பதிலும் அவர் தனக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார்.  நேர்மறையானதாக கல்வியை வழங்க வேண்டும் என்ற தாக்கம் அவரிடத்தில் இருந்தது. இத்தகைய சிறப்பு மிக்க சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசு கடந்த 1984ஆம் ஆண்டில் அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1985, ஜன 12-இம் தேதி முதன்முதலாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.   அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேசிய இளைஞர் தினம் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. அதன் மூலம் விவேகானந்தரின் நோக்கங்கள் மாணவர்களிடத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. அவர்கள் அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதுதேசிய இளைஞர் தினம்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மகத்தானது. இந்திய இளைஞர்கள் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும், வளர்ந்த நாடுகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு சிறந்து விளங்குகின்றனர். இருப்பினும் சில எதிர்மறையான எண்ணங்களை கொண்ட இளைஞர்களும் நம்நாட்டில் தான் உள்ளனர். இவர்கள் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அவரைச் சார்ந்திருக்கும் சமூகத்தையே பின்னோக்கி இழுக்கின்றனர்.

விவேகானந்தரின் விருப்பம்: ‘இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது, அவர்களது வயது எத்தகைய சவால்களையும் தூக்கி எறிந்து, சாதிக்க கூடியது’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘தூய்மை, பொறுமை, விடாமுயற்சி’ இந்த மூன்றும் தான் இவர்களுக்கான தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘இரும்பு போன்ற தசை’, ‘எக்கு போன்ற நரம்பு’ இளைஞர்களுக்கு வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். ‘ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்’ என்று விவேகானந்தர் கூறினார். மேலும் ‘நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்… இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்’ என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

செய்தி : இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered