மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.!

மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், காவல் துணை ஆய்வாளர் வில்சன், மணல் கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.

இது முதல் கொலை அல்ல. ஏற்கனவே மணல் கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கியும், லாரியை ஏற்றியும் கொலை செய்து இருக்கின்றார்கள்.

நேற்று மற்றொரு நிகழ்வாக, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி பேருந்து நிறுத்தம் வழியாக வந்த மணல் கடத்தல் டிராக்டரை மடக்கிய காவல் நிலையம் கொண்டு சென்றனர். வண்டியை ஓட்டி வந்தவர் திடீரெனக் குதித்துத் தப்பி ஓடி விட்டதால். டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த ஏட்டு மணிமுத்து டிராக்டருக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. அதன் விளைவாக, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலை தருகின்றது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்கிறபோது, ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அச்ச உணர்வுடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

தமிழகத்தில் அறிமுகம் ஆகி வருகின்ற துப்பாக்கித் தாக்குதல்களை, முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகளுடன், பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

காவல் துணை ஆய்வாளர் வில்சனைக் கொன்றவர்களை உடனே கண்டுபிடித்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும். கூடிய விரைவில் வழக்கை முடித்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான், இத்தகைய குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

வில்சனை இழந்து வேதனையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கேற்கின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏட்டு மணிமுத்து நலம் விழைகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..