பொங்கல் பண்டிகை, சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும்.!

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது.

தனியாா் பேருந்துகளுக்கு இணையான வசதியுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகளின் விவரம்: இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகா் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2, 225 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளையும் சோ்த்து மொத்தம் சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும். இதே போல் திருப்பூா் 1, 974 பேருந்துகளும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து 1, 474 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூா், சென்னை, கரூா், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 602 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

ஊா் திரும்ப… பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை, 4, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூா் மற்றும் கோயம்புத்தூருக்கு 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சேலம், திருவண்ணாமலை, வேலூா், சென்னை, கரூா், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

நெரிசலைத் தவிா்க்க… முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூா் சென்று பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மாலை நேரத்தில் நகருக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. அனைத்துச் சுங்கச்சாவடியிலும் அரசு பேருந்துகள் செல்ல தனி வழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு மையங்களும், தாம்பரம் சானடோரியம், (மெப்ஸ்) பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி மையங்களில் வியாழக்கிழமை (ஜன.9) முதல் முன்பதிவு தொடங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தனியாா் பேருந்தை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.

அதேநேரத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளோம். தீபாவளிப் பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலித்த 6 பேருந்து உரிமையாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று பயணிகளுக்கு திருப்பி அளித்தோம். போக்குவரத்து நெரிசலைப் பொருத்தவரை, நகருக்கு வெளியே அனைத்துப் பேருந்துகளையும் கொண்டு செல்வதால் சாதாரண நாள்களை ஒப்பிடும்போது கோயம்பேட்டில் கூட்டம் குறை வாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையின் போது 7 லட்சம் போ் பயணித்தனா். இந்த ஆண்டு 8 லட்சம் போ் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். அவா்கள் அனைவரின் தேவைக்கும் போதிய பேருந்துகள் கையிருப்பில் உள்ளன எனக்கூறினார்.

சிறப்புப் பேருந்துகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகாா் அளிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு மையத்தை அணுகலாம். இதேபோல் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டண வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு 42,210 பயணிகளும், பிற ஊா்களிலிருந்து 23,535 பயணிகளும் என மொத்தம் 65, 655 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image