மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.!

சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.!

தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாராபூர் டவர் அருகில் கூடினர். மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன் ஆகியோர் ஒன்றாக மறியலில் ஈடுபட சென்றனர். அண்ணாசாலையில் உட்கார்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு சாலையில் நாலாபுறமும் அமர்ந்தனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சாலையில் படுத்தும், உருண்டும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அப்போது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைதாக மறுத்த சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி வேனுக்குள் கொண்டு சென்றனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாரும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட 1200 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்களிலும், வேன்களிலும் ஏற்றி சமுதாய கூடத்துக்கு அழைத்து சென்றனர். மறியல் போராட்டத்துக்கு இணை கமி‌ஷனர் சுதாகர், துணை கமி‌ஷனர் தர்மராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கைது நடவடிக்கையின் போது போலீசாரையும் கண்டித்து போராட்டக்காரர்கள் கோ‌ஷம் எழுப்பினர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் போலீசார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தனர்.

மறியல் போராட்டத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அண்ணாசாலை வழியாக பாரிமுனை செல்ல வேண்டிய பஸ்கள் ஸ்பென்சர் வழியாக திருப்பி விடப்பட்டன.

மறியல் கைது நடவடிக்கையால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது.

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய பொதுக்குழு உறுப்பினர் உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் திருவொற்றியூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன் உட்பட 500 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆவடி நாகூர் கனி தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

திருவள்ளூரில் அனைத்து பஸ்களும் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடியது. பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சேம.நாராயணன், கீதா மகேளேற் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..