ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசம்… 48 கோடி விலங்குகள், 23 மனிதர்கள் உயிரிழப்பு…! அடுத்த அமேசானாகும் ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 48 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்துவரும் காட்டுத்தீயால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், ஆயிரத்து 400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீயில் சிக்கி ஏற்கெனவே 21 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கங்காரு தீவில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டுத்தீ சூழ்ந்ததில், அதில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆகியுள்ளது.
இந்நிலையில் விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் விலங்குகளையும் இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர்.விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன.

காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு புகைமூட்டம் இருப்பதால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.காட்டுத்தீ பரவி வரும் இடங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால், தீ வேகமாக பரவும் அபாயம் உள்ளது. சிட்னியிலிருந்து தீ பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு உதவி கப்பல்கள் வரும் வெள்ளிகிழமைக்குள் சென்றடையும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.வலியால் அரற்றும் கரடி ஒரு பெண் தீயில் சிக்கிய கரடியை மீட்டு தண்ணீர் கொடுத்து அதன் உஷ்ணத்தை தணிய வைக்கிறார். அது துடிக்கும், வலியால் அரற்றும் காட்சி மனதை அழுத்துகிறது.

தீயிலிருந்து மீட்கப்பட்ட கரடிகள், கங்காருகள்.. நாம் செய்த தவறுகளுக்கு இந்த அப்பாவி விலங்கினங்கள் பலியாவதற்கு என்ன ஆறுதல் கூறி அவற்றைத் தேற்ற முடியும்! எதிர்பாரத அளவுக்கு இப்படி வெப்ப நிலை அதிகரிக்க, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்தான் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுவதும்,ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றம், காட்டு தீ மிக எளிதாகப் பரவ வழிவகை செய்கிறது என்று சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதும், ஆஸ்திரேலியாவின் நிலைமை குறித்த கவலையை மென்மேலும் அதிகரிப்பவையாக உள்ளன.ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜனவரி 13 முதல் 16 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தங்கள் நாட்டின் பேரிடரை கருத்தில் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

செய்தி:  இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image