ஜனவரி 8,  பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!மிழக மக்களுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்.!

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் கூட்டாக இணைந்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள அந்த பொது வேலைநிறுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது. இதை வெற்றி பெறச் செய்யுமாறு தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய பொருளாதாரம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. நீண்ட நெடுங்காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்களது பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை எல்லாம் ஒழித்துக் கட்டும் வேலையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது; ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி இப்போது தனது மோசமான பொருளாதார கொள்கைகளின் காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் பேர் வேலை இழப்பதற்கு வழி வகுத்து இருக்கின்றார். விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்; விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புற வேலை உறுதி திட்டம் சரியாக செயல்படுத்தப் படாததால் பட்டினிச் சாவுகளை எதிர் நோக்குகிற அபாய நிலையில் உள்ளனர். புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதாகச் சொல்லி கல்வியை காவி மயம் ஆக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனது தோல்வியை மறைப்பதற்காக மக்களை மத ரீதியில் பிளவு படுத்துகிற வேலையில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. அதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் நாடெங்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நிலை கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய திட்டமோ திறனோ இல்லாத அரசாக மோடி அரசு இருக்கிறது.

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் அந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்து மோடி அரசுக்கு தக்க பாடம் புகட்ட முன்வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவி அழைக்கிறோம்!

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image