இன்று கூடுகிறது சட்டசபை: விவாதங்கள் அனல் பறக்குமா.?

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவார். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும்.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கவர்னர், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (1) ன் கீழ் சட்டசபை கூட்டத்தை ஜனவரி 6-ந்தேதி  கூட்டி உள்ளார்.

சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை யாற்றுகிறார்.

இந்த உரையில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம் பெறும். கவர்னர் உரையாற்றி முடித்ததும் சட்டசபை கூட்டம் விவாதம் இன்றி முடிந்துவிடும்.

இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்வார்கள். அனேகமாக 10-ந்தேதி வரை (வெள்ளி) சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக சட்டசபையில் உரையாற்ற நாளை காலை 9.50 மணிக்கு வரும் கவர்னரை சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் வரவேற்று அழைத்து வருவார்கள்.

உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து நேற்றுதான் இறுதி முடிவு வெளியாகி உள்ளது. இதில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

சட்டசபை விவாதத்தின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கார சார விவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலையும் தாமதமின்றி உடனே நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைப்பார். பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையும் முன் வைப்பார்.

மத்திய அரசு நிறைவெற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை உடனே சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.

குறுகிய நாட்களே சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் அனல் பறக்கும் விவாதங்களை தினமும் எதிர்பார்க்கலாம்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image