ஊரக உள்ளாட்சி தேர்தல்:நாளை பதவியேற்பு நிகழ்வு.!

27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 5,090 வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதம் உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 271 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 240 இடங்களையும் பிடித்துள்ளன.

314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 2356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 2199 இடங்களில் வென்றுள்ளது. மற்ற கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 512 இடங்களை பிடித்துள்ளனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை (6-ந்தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிகளை பொறுத்தவரையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கூட்டணிகள் தலா 13 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளன. இதனால் இந்த மாவட்டங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இழுபறி நிலை நீடிக்கிறது. அந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 மாவட்ட ஊராட்சிகளில் 8 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 6 இடத்தையும், காங்கிரஸ் 2 இடத்தையும் பிடித்துள்ளன.

சரிசமமான இடங்களை முடித்துள்ளதால் அங்கு மட்டும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை பிடிப்பது யார்? என்கிற கேள்வி நிலவி வருகிறது.

உள்ளாட்சி தலைவர் பதவிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டும் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு வருகிற 11-ந்தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இவர்களை தேர்வு செய்யவார்கள்.

இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிப்பது யார்? என்பதில் தான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணியில் 2356 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் 2199 உறுப்பினர்கள் உள்ளனர். 515 பேர் மற்ற கட்சிகளிலும், சுயேட்சையாக போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக 11-ந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக கணிக்க முடியாத நிலை உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..