பரபரக்கும் அரசியல் களம்- முன்னாள் எம்.பி அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து விலகுகிறாரா?

மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. அதன் எதிரொலியாக அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது.அதிமுக பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்து சட்டங்களுக்கும் துணை போகும் அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு அதிமுகவில் உள்ள இசுலாமியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததற்கு அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கும் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு வாக்களிப்பே காரணம் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் இனியும் அ.தி.மு.க.வில் இருப்பது சரியில்லை என்கிற முடிவுக்கு வந்த அன்வர் ராஜா, தி.மு.க.வுக்குப் போகலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக வின் சிறுபான்மையினர் வாக்குவங்கி சரிந்துள்ள நிலையில், அன்வர் ராஜாவும் அதிமுகவை விட்டு விலகிவிட்டால் இன்னும் சற்று அதிகமாகவே வாக்கு வங்கி சரியும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.இதற்கிடையே அன்வர் ராஜாவை இணைத்துக் கொள்வது பற்றி திமுக தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..