கடன் பாக்கி இருப்பதால் அமைச்சர் காருக்கு டீசல் வழங்க பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரை நிறுத்தி விட்டு பேருந்தில் புதுச்சேரிக்கு பயணம்.

புதுச்சேரியில் உள்ள அரசு பெட்ரோல் பங்குகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கார்களுக்கு கடனில் டீசல் வழங்குவது வழக்கம் .  இரவு புதுச்சேரியில் உள்ள அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் போடுவதற்காக புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனின் கார் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே 2 கோடியே 30 லட்ச ரூபாய் அளவிற்கு கடனுக்கு டீசல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெட்ரோல் பங்கை தொடர்ந்து இயக்க முடியாத நிலை இருந்து வருவதாகவும் கூறிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அமைச்சர் கமலக்கண்ணனின் கார் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காருக்கு டீசல் நிரப்பப்படாமலேயே அங்கிருந்து கார் வெளியேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தயாரான அமைச்சர் கமலக்கண்ணன் அங்கு சென்றால் தனது காருக்கு டீசல் கிடைக்காது என்பதால் காரைக்காலில் உள்ள அரசு சார்ந்த நிறுவனத்தின் பெட்ரோல் பங்கிற்கு டீசல் போட தனது காரை கொண்டு சென்றுள்ளார். ஆனால் இங்கும் அவரது காருக்கு டீசல் போடுவதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் டீசல் இல்லாத தனது காரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி அமைச்சரவையில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றுள்ளார் . நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு திணறுவதை இதனால் உணர முடிகிறது என்றாலும் ஒரு அமைச்சரின் காருக்கு டீசல் கூட போட முடியாத நிலையில் புதுச்சேரி அரசு இருப்பது தான் நெருக்கடியின் உச்சம். நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

, செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..