சூரியகிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, யா.ஒத்தக்கடையில், டிசம்பர் 26 அன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளரும்,வானியல் ஒருங்கிணைப்பாளரும், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிட்டம்பட்டி ஆசிரியருமான பெ.சிவராமன் அவர்கள் சூரிய கிரகணம் மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், சூரியனுக்கும் அவற்றிற்கும் இடையே உள்ள தொலைவு, கோள்களின் விட்டம் போன்ற தகவல்களைப் பல்வேறு படங்கள் உதவியுடன் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் மிக எளிமையாக விளக்கினார். முப்பட்டகம், ஸ்பெக்ட்ரோ மீட்டர் கொண்டு சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களைப் பிரித்துக் காட்டி, சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களை மாணவர்கள் நேரடியாக பார்க்கச் செய்தார். டிசம்பர் 26 அன்று காலை ஏற்படும் வளைவு சூரிய கிரகணம்(Annular Solar Eclipse) ஆனது மதுரையில் முற்பகல் 9.31 மணி முதல் ஒன்பது 9.32 மணி முடிய ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். சூரிய கிரகணம் என்பது சூரிய ஒளி மறைப்பு ஆகும். சூரிய ஒளியானது பூமியில் விழுவது சந்திரனால் தடுக்கப்படும் என்பதை பல்வேறு செயல்கள் மூலம் மாணவர்களுக்கு அருமையாக விளக்கினார். மேலும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் நேரடியாகப் பார்க்கக் கூடாது என்றும், சூரியக் கண்ணாடி மூலமும் மற்றும் சூரிய ஒளியின் பிம்பத்தின் மூலமாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். வெறுமனே அறிவியல் விழிப்புணர்வாக மட்டுமில்லாமல் புராணக்கதைகளை நவீன அறிவியலோடு தொடர்பு படுத்தி மாணவர்களுக்கு விளக்கிய விதம் அனைவருக்கும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பேனா துளை கேமிரா, பந்து கண்ணாடி போன்றவற்றை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை செய்து காட்டினார். அலைபேசி செயலி வழியே வானில் காணப்படும் கோள்களையும் ராசி நட்சத்திரங்களையும் காட்டியபோது மாணவர்களும் ஆசிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டு அவற்றை மிகுந்த உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்ட வினாக்களுக்கு பதிலளித்தார். நன்றாக பதிலளித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கி அவர்களைப் பாராட்டினார். ஒத்தக்கடை பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பூங்கொடி அன்னாருக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒத்தக்கடை பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா, ஆசிரியர்கள் மாலா, மோசஸ் மங்களராஜ் மற்றும் ஷகிலாமாய் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..